அலகாபாத்:
திருமணமான தம்பதியினர் தங்களுடைய திருமண வாழ்வில் தலையிட வேண்டாம் என்று மற்றவர்களுக்கு அறிவுறுத்தல் கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், திருமண நோக்கத்திற்காக மட்டும் மதம் மாறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளது.

ஒரு முஸ்லிம் பெண் ஹிந்து மதத்திற்கு மாறி, ஒரு மாதத்திற்கு பின்பு இந்து மத சடங்குகளின் படி திருமணம் செய்து கொண்டதை கண்ட நீதிமன்றம் இதைப்பற்றி பேசியுள்ளது.

இது தொடர்பாக கடந்த மாதம் 23-ஆம் தேதி அன்று பேசிய நீதிபதி மகேஷ் சந்திரா திரிபாதி தெரிவித்துள்ளதாவது: உண்மைகளையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, இந்த நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பின் 226 ஆவது பிரிவின் கீழ் இந்த விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அலகாபாத் நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கு தொடுத்த மனுதாரர் பிறப்பால் முஸ்லிம் என்பதும் அவர் 29. 6. 2020 அன்று தனது மதத்தை முஸ்லிமிலிருந்து ஹிந்துவிற்கு மாற்றிக் கொண்டார் எனவும், 31. 7. 2020 அன்று திருமணம் செய்து கொண்டார் எனவும் தெரியவந்துள்ளது. இதன் மூலமாக அவர்கள் மதம் மாறியது திருமண நோக்கத்திற்காக மட்டுமே என்பது தெளிவாக தெரிகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் மனுதாரர் தாக்கல் செய்த ரிட் மனுவில் கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், தான் மதம் மாறியது சரி என்றும், தங்களுடைய அமைதியான திருமண வாழ்வில் யாரும் தலையிடக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதற்கு பதிலளித்த நீதிமன்றம் திருமண நோக்கத்திற்காக மட்டுமே மதம் மாறியது சரி என்று ஏற்றுக் கொள்ளப்படாது, என்றும் அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.