வாடிக்கையாளர் வேண்டுக்கோளின்படி முஸ்லீம் ஊழியர் மாற்றம் – ஏர்டெல் நிறுவனத்திற்கு கண்டனம்

முஸ்லீம் ஊழியர் வேண்டாம் என பெண் வாடிக்கையாளர் கூறியதற்கு ஏர்டெல் நிறுவனம் சம்மதம் தெரிவித்ததை கண்டித்து சமூக வளைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஏர்டெல் நிறுவனத்தின் டிடிஎச் சேவையை பெற்றிருந்த டெல்லியை சேர்ந்த பெண் வாடிக்கையாளர் டிடிஎச் இணைப்பு குறித்து புகார் அளிக்க வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அவரின் புகாரை ஏற்க சோயிப் என்ற ஏர்டெல் ஊழியர் அழைப்பு விடுத்திருந்தார். அவரிடம் பேசிய அந்த பெண் வாடிக்கையாளர், “ சோயீப் நீங்கள் ஒரு முஸ்லீம். உங்கள் பணி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. உங்கள் குர் ஆனில் வாடிக்கையாளர் சேவை குறித்து வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. இந்து மதத்தை சேர்ந்த ஊழியர் எனக்கு சேவை அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
airtel
இதனை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு ஏர்டெல் நிறுவனம் சார்பில் டிவிட்டரில் பதில் அளிக்கப்பட்டது. அதில், உங்களுக்கு எந்த சேவை வேண்டுமானாலும் நாங்கள் செய்து கொடுக்க தயாராக உள்ளோம். உங்களை தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண்ணை தரவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஏர்டெல் நிறுவனம் அந்த பெண் வாடிக்கையாளர் வேண்டுகோளை ஏற்று முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஊழியரை மாற்றி, இந்து மதத்தை சேர்ந்த ஊழியர் ஒருவரை பேச வைப்பதாக கூறியது. இதனை தொடர்ந்து சமூக வளைதளங்களில் நெட்டிசன்கள் ஏர்டெல் நிறுவனத்தின் மீது பலவிதமாக கேள்விகளையும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஏர்டெல் நிறுவனத்திற்கு டிவிட்டரில்,” பெண் வாடிக்கையாளர் மீதான உங்களின் உரையாடலை கவனித்தேன். இனிமேல் உங்கள் நிறுவனத்திற்கு ஒரு பைசா கூட கட்டணமாக செலுத்த நான் விரும்பவில்லை. எனது ஏர்டெல் நெட்வொர்க்கை வேறு நிறுவனத்திற்கு மாற்ற உள்ளேன். எனது வீட்டில் உள்ள ஏர்டெல் டிடிஎச் சேவையையும் மாற்ற போகிறேன்” என்ற காட்டமாக கூறினார்.

ஏர்டெல் நிறுவனத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சில மணி நேரங்களில் அந்த நிறுவனம் பெண் வாடிக்கையாளருக்கு டிவிட்டரில் மீண்டும் ஒரு செய்தியை பதிவிட்டிருந்தது. அதில் ”உங்களுக்கான சேவையை தான் நாங்கள் அளிக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பாட்னரகள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் சாதி, மதம் பார்ப்பதில்லை. உங்களிடம் பேசிய முஸ்லீம் மற்றும் இந்து ஊழியர்கள் எங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள். வாடிக்கையாளர் அழைப்பு வரும்போது முதலில் எந்த ஊழியர் எடுக்கிறாரோ அவரே பேசுவார்” என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது

இதேபோல் ஏப்ரல் மாதம் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்த இருவர் ஓலா வாகனத்தில் பயணம் செய்து விட்டு ஓட்டுநருக்கு பணம் தர மறுப்பு தெரிவித்தனர். காரணம், ஓட்டுநர் முஸ்லீம் என்பதால் ஜிகாதிகளுக்கு பணம் தரமுடியாது என அவர்கள் கூறியதாக அபிஷேக் மிஷ்ரா என்பவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.