குக்கர் விநியோகம்: பாத்திரக் கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ராயபுரத்தில் உள்ள பிரபல பாத்திர கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மட்டுமன்றி சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு, ஓட்டுப்போட தனது சின்னமான குக்கர் சின்னத்துக்கு வாக்களிக்கும்  பொருட்டு, ஒவ்வொரு வாக்காளருக்கும் இலவசமாக குக்கர் கொடுக்கப்படுவதாக   தேர்தல் பார்வையாளர்களுக்கு புகார் வந்துள்ளது.

இதற்கான டோக்கன் விநியோகம் நடைபெறுவதாகவும், வடசென்னையில் உள்ள பிரபல பாத்திரக் கடைகளில் இருந்து குக்கர் பெற்றுக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, சென்னை ராயபுரம் பகுதிகளில் உள்ள பாத்திரக் கடைகளில்  வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. வியாபாரிகள் அச்சமடைந்து உள்ளனர்.