டில்லி,

மானியம் மற்றும் மானியம்  அல்லாத வீட்டு உபயோகத்துக்கான சமையல் கேஸ்  சிலிண்டர் விலை இன்று முதல்  மீண்டும் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் சமையல் எரிவாயுவின் விலை மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.660 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை 710ரூபாயாக உயர்ந்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு பதவிக்கு வந்ததுமுதல் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மானிய சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது, மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படுவதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி,  சென்னையில் இன்று முதல் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ710-க்கு விற்கப்பட உள்ளது. அதுபோல, 19 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சிலிண்டர் விலை தற்போது சென்னையில் 1,410 ரூபாயாக உயர்ந்துள்ளது. டெல்லியில் 1,296 ரூபாயாக உள்ளது. கொல்கத்தாவில் 1351 ரூபாயாகவும், மும்பையில் 1,244 ரூபாயாகவும் உள்ளது.

கடந்த டிசம்பர் 1ந்தேதி அன்றும் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி,  தமிழகத்தில் மானியம் உடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்தப்பட்டது.  இதனால் ரூ.660 ஆனது. தற்போது அடுத்த 15 நாட்களில் மேலும் ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயில் ஏற்படும் மாற்றம் மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் ஏற்படும். சர்வதேச அளவில் எல்பிஜி விலை, அந்நிய முதலீடு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மானியத் தொகை மாறுபடுகிறது. மத்திய அரசின் விதிமுறைப்படி குடும்பத்துக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானியத்துடன் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.