டில்லி,

மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

நாடு முழுவதும் மாதம்தோறும் சமையல் எரிவாயுவின் விலை மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. இதன் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள் மோடியின் ஆட்சியால் கடும் எரிச்சலுக்கு ஆளாகி உள்ளனர்

கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி பாராளுமன்றத்தில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் மாதம் மாதம் சிலின்டர் விலை படிப்படியாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து  ஒவ்வொரு மாதமும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலையை ரூ.4 வீதம் உயர்த்தும்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.2.31 மட்டுமே உயர்த்துவதாக எண்ணை நிறுவனங்களை மக்களை ஏமாற்றியது.  ஆனால் இந்த மாதத்தில்  சிலிண்டருக்கு 7 ரூபாய் உயர்த்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக  மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.479.77-ல் இருந்து 487.18 ரூபாயாகி உள்ளது. அதாவது ஒரு சிலிண்டரின் விலை 7.41 ரூபாய் உயர்ந்துள்ளது.

மானியம் இல்லா கியாஸ் சிலிண்டர் விலை ரூ.74 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இந்த மாதாந்திர விலைமாற்ற திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மானிய சிலிண்டரின் விலை சுமார் 68 ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.