சென்னை: தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களை ஒட்டி, பெண்களுக்கு லைனென் பட்டு சேலைகளையும், ஆண்களுக்கு கைத்தறி குர்தாக்கள் மற்றும் சட்டைகளையும் அறிமுகம் செய்துள்ளது அரசு நிறுவனமான கோஆப்டெக்ஸ்.

இந்த சேலைகள் திருப்பூர் மற்றும் சிறுமுகை பகுதிகளிலுள்ள நெசவாளர்களால் நெய்யப்பட்டதாகும். ஊடு இழைகளுக்காக லைனென் நூல் மற்றும் தொகுப்புக்காக சுத்தமான பட்டு ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

பருத்தி மற்றும் பட்டுப் பருத்தியில் 1000 புட்டா சேலைகளை முயற்சித்து வெற்றி கண்ட பின்னர், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான கோஆப்டெக்ஸ், அதேவகையான டிசைனை மென் பட்டு சேலையில் முயன்றுள்ளது.

அகமதாபாத்தின் தேசிய டிசைன் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இளம் வடிவமைப்பாளர்களை, நெசவாளர்களுடன் இணைந்து பணிசெய்ய வைத்து, ஆர்கானிக் காட்டன் சேலைகளில் ரங்கோலி வடிவமைப்பு சிறப்பாக இடம்பெற கோஆப்டெக்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்தது.

இந்த வடிவங்கள், வீடுகளில் போடப்படும் கோலங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும் என்று கோஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் தெரிவித்தார். மேலும், ஆரணியிலுள்ள நெசவாளர்கள் பாரம்பரிய முறையின்படி புதிய வண்ணங்களை உருவாக்குவதில் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.