பெங்களூரு,

ர்நாடக மாநிலம் கூர்க்கில் டிடிவி ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதியில், கர்நாடக காவல்துறை அனுமதியின்றி விசாரணை நடத்தியதாக, தமிழக காவல்துறை மீது கர்நாடக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள  குஷால் நகரில் உள்ள சொகுசு  விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்த விடுதிக்குள்  சில நாட்களுக்கு முன்பு கோயம்புத்தூர், நாமக்கல் போலீஸார் திடீரென நுழைந்து எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது, தற்கொலை செய்துகொண்ட  நாமக்கல் ஒப்பந்ததாரர்  வழக்கில் முன்னாள் அமைச்ச ரான  பழனியப்பனை கைது செய்ய வந்ததாக தமிழக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் டிடிவி தரப்பு  எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் அருகிலுள்ள  சுண்டிகொப்பா காவல் நிலையத்தில் தமிழக போலீசார் புகார் கொடுத்தனர்.

அதில், தமிழக போலீசார் எங்களை மிரட்டியும்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டால்  ரூ. 20 கோடி வரை தருவதாக  ஆசை காட்டிய தமிழக காவல் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.

இந்த புகாரை பதிவு செய்துகொண்ட  சுண்டிகொப்பா போலீஸார், புகார் குறித்து அங்கு தங்கி உள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும், இதுகுறித்த விசாரணைக்கு தமிழக போலீசாரை வரவழைக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் இரு மாநில காவல் துறை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.