சென்னை

மிழக அரசு அறிவித்துள்ள கூவம் நதி சீரமைப்பு குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரில் ஓடும் கூவம் நதியின் பெயரைக் கேட்டாலே பலரும் மூக்கை பொத்திக் கொண்டு ஓடும் நிலையில் அந்த நதி உள்ளது.   ஆனால் சென்ற நூற்றாண்டில் தொடக்கத்தில் நகரின் நீராதாரங்களில் ஒன்றாக கூவம் நதி இருந்ததை யாராலும் நம்ப முடியாது.   இந்நிலையில் தமிழக அரசு கூவம் நதியைச் சீரமைத்து பழைய நிலைக்குக் கொண்டு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.   இது குறித்து  நிபுணர்கள் சிலர்  கருத்து தெரிவித்துள்ளனர்.

கூவம் கலாச்சார அமைப்பின் நிறுவனர் வெங்கடேசன் ராமகிருஷ்ணன், “அரசு இனி கூவம்  நதியில் நேரடியாகக் கழிவு நீரை விடுவதைத் தடை செய்ய உள்ளதாகக் கூறியது வரவேற்கத்தக்கதாகும்.  ஆனால் இது ஒரு ஜீவ நதி இல்லை.  எனவே முகத்துவாரத்தில் சேரும் மணலை இந்த நதி தனது நீரின் மூலம் சுத்தம் செய்ய முடியாது.   ஒரு நதி அழகாவது அதன் நீரினால் மட்டுமல அதை சுற்றி வசிக்கும் மக்களின் இல்லங்களினாலும் தான்.   குடிசைகள் சுற்றி உள்ள  நிலையில் நதியை அழகாக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் பேராசிரியரான ஜனகராஜன், “அரசு இது குறித்த சரியான திட்டத்தைத் தீட்ட வேண்டும்.  கழிவு நீர் நேரடியாக கலக்கக் கூடாது என உத்தரவிட்டால் மட்டும் போதாது.  அதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.   இதற்கான நிரந்தர தீர்வை எடுத்து வரவேண்டும். வீடுகளில் மட்டும் இன்றி பல்லாவரம் தோல் சுத்திகரிப்பு, ஈக்காடு தாங்கல் சிறு தொழில் நிறுவனங்கள், உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் தங்கள் கழிவு நீரை கூவத்தில் விடுகின்றனர். இதை முதலில் தடுக்க வேண்டும்.   அது மட்டுமின்றி கழிவு  நீர் லாரிகளும் கூவத்திலும் அடையாற்றிலும் கழிவு நீரை விடுகின்றனர்.” எனக் கூறி உள்ளார்.

இந்தியச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி, “தற்போது கூவம் நதியில் வரும் சுத்தமன தண்ணீர் அனைத்தும் காஞ்சீபுரத்தில் 1942  ஆம் வருடம் கட்டப்பட்ட கேச்வரம் அணையில் தடுத்து நிறுத்தப்படுகிறது.  அத்துடன் கொரட்டுர் அணைக்கட்டு நல்ல தண்ணீரை செம்பரம்பாக்கம் பகுதிக்குத் திருப்பி விடுகிறது.  எனவே இந்த நதியில் நல்ல தண்ணீர் வர வழியில்லை.   எனவே இந்த நதியில் கலக்கப்படும் நீரை ஆர் ஓ முறையில் சுத்தம் செய்து விட வேண்டும்.  கூவம் நதியை சுத்தம் செய்யலாமே தவிர சீரமைக்க முடியாது.  இது கூவம் நதிக்கு மட்டுமின்றி அனைத்து நீர்நிலைகளுக்கும் பொருந்தும்” எனத் தெரிவித்துள்ளார்.