வாஷிங்கடன்:
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் கொலம்பியா அணி  மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அந்த அணி அமெரிக்காவை 1-0 என்ற கோல்கணக்கில் வென்றது.
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதிப் போட்டியில் தோற்ற அமெரிக்கா மற்றும் கொலம்பியா அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில்  சந்தித்தன.  ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயன்றன.  31வது நிமிடத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ்  ஒரு கோல் அடிக்க, அந்த அணி முன்னிலை பெற்றது.
இதைத்தொடர்ந்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவர அமெரிக்க அணி தீவிரமாக முயற்சி செய்தது.  அந்த அணியின் நட்சத்திர வீரரான கிளின்ட் டெம்ப்ஸே பலமுறை கொலம்பிய கோல் எல்லைக்குள் நுழைந்து கோல் அடிக்க முயன்றார்.  ஆனால் கொலம்பியாவின் கோல்கீப்பர் சிறப்பாக செயல்பட்டு டெம்ப்ஸேவால் கோல் அடிப்பதை தடுத்தார்.
இதைத்தொடர்ந்து கொலம்பியா அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டித்தொடரில் அமெரிக்காவை கொலம்பியா அணி தோற்கடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு நடந்த லீக் ஆட்டத்தில் கொலம்பியா அணி 2-0 என்ற கோல்கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது.
q
இந்த போட்டி குறித்து அமெரிக்காவின் பயிற்சியாளர் கிளின்ஸ்மேன் பத்திரிகையாளர்களிடம், “கொலம்பியா வீரர்கள் முதல் பாதி ஆட்டத்தில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் எங்கள் வீரர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. அமெரிக்காவுக்கு இப்போட்டியில் பலமுறை கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், வீணாகிவிட்டது.
கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றபோதிலும், இந்தத் தொடரில் அமெரிக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மிக்கப்பெரிய தொடர் ஒன்றில் அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் சிலி மற்றும் அர்ஜென்டினா அணிகள் சந்திக்கின்றன.