அதிகரிக்கும் கடல் வெப்பநிலை – முற்றிலும் அழியும் பேராபத்தில் பவளப் பாறைகள்..?

பருவநிலை மாற்றம் காரணமாக, கடல் பகுதியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதால், வரும் 2100ம் ஆண்டுவாக்கில், பவளப் பாறைகள் முற்றிலும் அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘பவளம்’ எனப்படும் ஒரு வகை கூட்டுயிர்கள் சுரக்கும் சுண்ணாம்புப் பிணைப்புகளால் பவளப்பாறைகள் உருவாகின்றன. பார்ப்பதற்கு அழுத்தமான சுண்ணாம்புச் செடிகளின் தொகுப்புபோல காணப்படுகின்றன இப்பாறைகள். இந்தத் தொகுப்புகளோடு பலவகையான நுண்ணுயிரிகள் ஒட்டி வளர்ந்து பவளப்பாறைகளின் தன்மையை நிர்ணயிக்கின்றன.

கடலின் மொத்தப் பரப்பில் 0.1% அளவிற்கு பவளப்பாறைகள் உள்ளன. அதேசமயம், 25% அளவிற்கான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு ஆதாரமானவை இவை என்பது கவனிக்கத்தக்கது. உலக அரசுகள் மற்றும் இதர தரப்பினரின் அலட்சியம் மற்றும் சுயநலம் உள்ளிட்ட விஷயங்களால் உலகின் பருவநிலை உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்பட்டு, அதன்மூலம் கடலின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக 2040ம் ஆண்டுக்குள் 70% முதல் 90% அளவிற்கான பவளப் பாறைகள் அழிந்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகின் நீளமான குயின்ஸ்லாந்து பவளப்பாறைகளைக் கூட நிலைநிறுத்துவதும் சவாலாக அமைந்து விடும். கார்பன் வெளியீட்டு அளவை குறைத்தால் மட்டுமே இவற்றை பாதுகாக்க முடியும்.

இல்லையெனில் வரும் 2100ம் ஆண்டிற்குள் கடலில் பவளப்பாறை என்பதே இல்லாத நிலை ஏற்படும் என கடலியல் விஞ்ஞானிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பவளப்பாறைகள் அழிந்தால், கடல் வாழ் உயிரினங்களில் கணிசமானவை அழிந்துவிடும் என்பது கவனிக்கத்தக்கது.