தராபாத்

தெலுங்கானா மாநிலத்தில் 150 பேருடன் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்ட இருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

தெலுங்கானாவில் கொரோனாவால் சுமார் 20,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 280க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 11500க்கு மேற்பட்டோர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  கொரோனாவை கட்டுப்படுத்த அரசு கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இரு வாரம் முன்பு ஐதராபாத்தை அடுத்துள்ள ஹிமாயத் நகரில் 63 வயதாகும் வைரவியாபாரி ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.  இதில் பல வைர வியாபாரிகள், ,அரசியல் பிரமுகர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

அதன்பிறகு மூன்று நாட்களில் ஒரு வைர வியாபாரிக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது.  அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி கடந்த வாரம் உயிர் இழந்தார்.  அதன் பிறகு விருந்தில் கலந்துக் கொண்ட மற்றொரு வைரவியாபாரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவரும் உயிர் இழந்துள்ளார்.

இதே விருந்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பிரமுகர் உள்ளிட்ட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  இது தெலுங்கானா மாநிலத்தை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.  இந்த விருந்தில் கலந்துக் கொண்ட அனைவரும் தற்போது கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.