தென்னக ரயில்வேயும் கொரோனா பாதிப்பும் : ஒரு கண்ணோட்டம்

சென்னை

லகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு பெண் ரயில்வே ஊழியர் உயிர் இழந்துள்ளார்.

உலகின் பல நாடுகளிலும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.    இந்தியாவில் இதுவரை 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 4340க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்  தமிழகத்தில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி விட்டது.   இதுவரை 128 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நான்காம் கட்டமாக நடைபெற்று வருகிறது.   தற்போது ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.  ரயில், விமானப் போக்குவரத்துக்கள் தொடங்கப்பட்டுள்ளன.   தென்னக ரயில்வேயில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

சரியான எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை என்றாலும் 20-30 பேருக்கு பாதிப்பு இருக்கலாம் என தெரியவந்துள்ளது.  இதில் ஐசிஎஃப் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களில் மட்டும் சுமார் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.   இங்கு கொரோனா சிகிச்சைக்குத் தனி மருத்துவமனை உள்ளது.  நேற்று ஐசிஎஃப் ஊழியர் ஒருவர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் உயிர் இழந்தார்.

நேற்று ரயில்வே ஜாயிண்ட் ஆபிஸ் ஸ்டோர்ஸில் பணி புரியும் 55 வயதான ஒரு பெண் ஊழியர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். அவரை பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை மருத்துவர்கள் வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தி உள்ளனர்.  அவர் உடல்நிலை மோசமானதால் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் உயிர் இழந்துள்ளார்.

தற்போது தென்னக ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது.  ரயில்வே பொது மேலாளர் நேற்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் 55 வயது மற்றும் அதற்கு அதிகமான ஊழியர் மற்றும் அதிகாரிகள் கொரோனா பாதிப்புக்கு இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டில் இருந்தே பணி புரிய உத்தரவிட்டுள்ளார்.   ஒவ்வொரு பிரிவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக எடுக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.