ரோம்: இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றால் மரணித்த 500 நபர்களது குடும்பத்தினர், தங்களுக்கு 100 மில்லியன் யூரோக்கள் நஷ்டஈடு தர வேண்டுமென்று கோரி, அந்நாட்டு பிரதமர், சுகாதார அமைச்சர் மற்றும் மாகாண ஆளுநருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.

வாதிகள், இந்த வழக்கில், இத்தாலி பிரதமர் கியூஸிப் கான்டே, அந்நாட்டு சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா மற்றும் வடக்கு லம்பார்டி பிராந்திய ஆளுநர் அடிலியோ ஃபான்டனா ஆகியோரை சேர்த்துள்ளனர்.

ரோமிலுள்ள நீதிமன்றத்தில், டிசம்பர் 23ம் தேதி இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிகாரத்திலுள்ள மேற்கண்ட மூவரின் செய்தித் தொடர்பாளர்களும், இந்த வழக்குத் தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

“தங்களின் கடமையை செய்ய வேண்டியிருந்து, ஆனால் செய்யத் தவறியவர்களுக்கான எங்களின் கிறிஸ்துமஸ் பரிசு இதுவாகும்” என்று வாதிகளின் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தரப்பினர் ஒவ்வொருவரும் தலா 259000 யூரோக்களை நஷ்டஈடாக கேட்டுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 100 மில்லியன் யூரோக்கள் ஆகும் என்றும் தெரிவிக்கின்றனர் அவர்கள்.