சென்னை உயர்நீதிமன்ற பாதுகாப்பு பணியிலிருந்த 8 பேருக்கு கொரோனா

சென்னை:

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருகக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஐஐடி வளாகம், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் நோயாளிகளின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. 15 ஆவது நாளாக ஆயிரத்தைத் தாண்டி பாதிப்பு பதிவாகியுள்ளது.

மேலும், தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 1,138 பேர் கொரோனாவில் இருந்து நோயிலிருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,547 ஆகப் பதிவாகி இருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 31, 896 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 38 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக இதுவரை 435 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.