நியூயார்க்

சீன அரசு கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை சுமார் 80000 எனக் கூறி வரும் வேளையில் அது 6.40  லட்நத்துக்கு மேல் என அமெரிக்கப் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

சென்ற வருட  இறுதியில் சீனாவில் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.  இந்த வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வரும் வேளையில் அந்நாட்டு அரசு இந்த வைரஸ் மனிதரிடம் இருந்து மனிதருக்குப் பரவாது என அறிவித்தது.  அதை உலக சுகாதார மையமும் ஆமோதித்தது.  ஆனால் அது தவறு என சில மருத்துவர்கள் அறிவித்த பிறகு அதை அரசு ஒப்புக் கொண்டது.   ஆனால் அந்த மருத்துவர்கள் குறித்து அதன் பிறகு எவ்வித தகவலும் இல்லை.

அமெரிக்கா தொடர்ந்து இது குறித்து சீனாவின் மீது குற்றம் கூறி வருகிறது.  அவ்வகையில் அமெரிக்கப் பத்திரிகையான நியூயார்க் போஸ்ட் இது குறித்த அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.   அதன் விவரம் வருமாறு

அந்த செய்தியில், “சீனாவின் ராணுவம் நடத்தும் தேசியப் பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒரு வெளிநாட்டு ஊடகத்துடன் சேர்ந்து கொரோனா பாதிப்பு குறித்து நடத்திய கணக்கெடுப்பு விவரங்கள் கசிந்துள்ளன.  அதன்படி நாட்டில் மொத்தம் சுமார் 80000க்கு மேற்பட்டோர் மட்டுமே மரணம் அடைந்துள்ளதாக வெளியான தகவல்கள் தவறாகும்.   மாறாகச் சீனாவில் 6,40,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த தகவலில் சீனாவில் உள்ள 230 நகரங்களில் பிப்ரவரி தொடக்கம் முதல் ஏப்ரல் இறுதி வரை எங்கெங்கு பாதிப்பு அடைந்துள்ளது என்னும் விவரங்கள் உள்ளன  மேலும் இந்த தகவல்களில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், நகரின் ரயில் நிலையங்கள், உணவு விடுதிகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளன.   ஆனால் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் சீன அரசு இதுவரை 82000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 4633 பேர் மரணம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் தற்போது 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 90000க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.  அந்த அடிப்படையில் பார்க்கும் போது சீனா அறிவித்த எண்ணிக்கை சிறிதும் நம்பும்படியாக இல்லை. சீனா உண்மை நிலையை மறைத்து  செய்திகளை வெளியிட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. வுகான் நகரில் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம் இருக்கலாம் எனக் கடந்த வாரம்  அரசு கூறியது நினைவிருக்கலாம.

சீன பல்கலைக்கழகத்தின் கணக்கெடுப்பு தகவல்கள் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.  இதுவரை கசிந்த தகவல்களும் முழுமையான தகவல்களாக இல்லை.  ஆனால் சீனாவின் தகவலில் பாதிப்பு மற்றும் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை மிகவும் குறைத்து வெளியிடப்பட்டது என்பது தெளிவாகி உள்ளது.    மேலும் அமெரிக்க அரசு ஏற்கனவே சீன அரசு தகவல்களைத் திரித்து வெளியிட்டுள்ளது எனக் கூறியது இதன் மூலம் உண்மையாகி உள்ளது “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.