ஜெய்ப்பூர்

கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு எச் ஐ வி மருந்துக் கலவையை வழங்கலாம் எனச் சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்தியாவுக்கு வந்திருந்த மூத்த இத்தாலிய தம்பதியருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.   அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள எஸ் எம் எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.   அவர்களுக்கு அங்குள்ள மருத்துவர்கள் லோபினோவிர், ரிடோனாவிர் மருந்துகளில் கலவையை அளித்ததில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.

இந்த இரு மருந்துகளும் எச் ஐ வி நோய்க்கான மருந்துகள் ஆகும்.  இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கொரோனா குறித்த வழிமுறைகளை அறிவுறுத்தி உள்ளனர்.  அதில் எச் ஐ வி நோய்க்கான லோபினோவிர் மற்றும் ரிடோனாவிர்  மருந்துக் கலவையை கொரோனா சிகிச்சைக்கு மருத்துவர் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளனர்.

கொரோனா பாதிப்பின் தீவிரத்தைப் பொருத்தும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு,  நீண்ட நாள் நுரையீரல் நோய், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தோர் ஆகியோருக்கு இந்த மருந்துகளைப் பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவர்கள், உலக சுகாதார அமைப்பினர் உள்ளிட்டோர் இதைப் பரிந்துரை செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.