கொரோனா : ஸ்பெயின் நாட்டில் அனைத்து  மருத்துவமனைகளும் தேசியமயம்

மாட்ரிட்

கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் நாட்டில் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தேசியமயம் ஆக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.  ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கோரோனாவின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. அங்கு சுமார் 9200 பேர் தக்கப்பட்டு அவர்களில் 310 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்கத்தினால்  ஸ்பெயின் அரசு சென்றவாரம் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.    ஸ்பெயின் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள், உணவு விடுதிகள், மது அருந்தும் இடங்கள், கடைகள், உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.  ஓரிரு சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் மருந்துக் கடைகள் மட்டும்  திறக்கப்பட்டுள்ளன.

சாலைகளில் மக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   அதை மீறுவோரைக் கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்த படுகின்றன.  ஆயினும் நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் அரசு அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களைத் தேசிய மயமாக்கி உள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் சால்வேடார் தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்பெயினில் நான்காம் ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்பு பயிலுவோர் நாட்டின் சுகாதாரப் பிரிவில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.  அத்துடன் மருத்துவ உதவி செய்யும் வசதி உள்ள நிறுவனங்கள் அரசுடன் இணைந்து மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.