கொரோனாவும் டொனால்டு டிரம்ப்பின் தேர்தல் அரசியலும்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் வெல்ல அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கொரோனா பரவலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு பலமாகவே எழுந்துள்ளது.

WHO டைரக்டர் ஜெனரல் சமீபத்தில் மரண ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கும் கொரோனாவை “மனிதகுலத்தின் எதிரி” என்று வர்ணித்துள்ளார். இந்தக் கட்டுரை எழுதப்படும் நொடி வரை,  உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சம் பேரைத் தாண்டியுள்ளது. மார்ச மாத தொடக்கத்தில் உலகளாவிய தொற்று நோயாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, தடுப்பு மருந்து கண்டறிதலில் ஏற்பட்டிருக்கும் சுணக்கம், வைரஸைக் கட்டுப்படுத்தும் செயலில் சமூக அளவிலான கட்டுபாடுகளுக்கு இருந்த முக்கியத்துவத்தைக் கூட்டியது. ஆனால் உலக அளவில் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் இதே சமூகத்தில் ஒரே நேரத்தில் குவிய ஆரம்பித்திருக்கும் அளவுக்கும் அதிகமான தகவல்கள்களில் அதாவது தகவல்களின் குவியலில் இருந்து – சரியான நபர்களிடமிருந்து நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை மட்டும் பெறுவதில் இருந்த கடினத் தன்மையைக் அதிகப்படுத்தியுள்ளது. இதனால் “சமூக இடைவெளி” போன்ற தடுப்பு நடவடிக்கைகள் பெரும்பாலான நாடுகளில் தோல்வியுற்றன. தடையின்றி பரவிக் கொண்டிருக்கும் போலி செய்திகள், தீவிரமாக பரப்பப்பட்டு கொண்டிருக்கும் வீட்டு வைத்திய பரிந்துரைகள் என பல தவிர்க்க இயலாத காரணங்களோடு, இந்த நெருக்கடி நேர அவசர காலத்தில் அரசியலும் செய்யப்படுவதால், கொரோனா ஒழிப்பு மேலும் தடைபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலை சந்திக்கவுள்ள மற்றும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா, மெக்ஸிகோ மற்றும் ஈரானுடன் பகையை பாராட்டும் அவரது முதல் அஜண்டாவை அமெரிக்காவின் முதல் அஜண்டாவாகக் காட்டி, கொரோனா பரவலை வைத்து அரசியல் செய்ததின் மூலம் உலக நாடுகளின் ஒத்துழைப்பைத் தடுத்துள்ளார். .

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலும் சீன வைரஸும்

கடந்த சில நாட்களில், கொரோனா வைரஸைப் பற்றிய விளக்கத்தின் போது அவர் பேசிய ஒரு பேச்சிற்காக டிரம்ப் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தார். சீனாவின் வுஹானில் உள்ள ஒரு உணவு சந்தையில் தோன்றியதாகக் கருத்தப்படும் கொரோனா வைரஸை அவர் ”சீன வைரஸ்” என்றுக் குறிப்பிட்டார்.  அவரது வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ அதை “வுஹான் வைரஸ்” என்று குறிப்பிட்டு விமர்சனங்களை சந்தித்தார். குடியரசுக் கட்சியின் செனட்டர், டாம் காட்டன் (ஆர்-ஏஆர்) பெரும்பாலும் அமெரிக்க செனட்டின் கட்டிடத்தில் அதே மாதிரியே பலமுறை அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். பிரதிநிதிகள் சபையின் உயர்மட்ட குடியரசுக் கட்சித் தலைவர் கெவின் மெக்கார்த்தி (ஆர்-சிஏ -23) இந்த நோயை “சீன கொரோனா வைரஸ்” என்று ஒரு ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். கடைசியாக, சிபிஎஸ் வெள்ளை மாளிகையின் நிருபர் வீஜியா ஜியாங், வெள்ளை மாளிகையின் உதவியாளர்கள் ஊடகவியலாளர்களுடனான பேட்டிகளில், வைரஸை “குங்-ஃப்ளூ” என்று குறிப்பிடுகிறார்கள் எனக் கூறினார். நிச்சயமாக, வைரஸ் ஆரம்பகால தோற்றத்திற்கான தகவல்களில் சீனா “வெளிப்படைத்தன்மை இல்லாமை” யைக் கடைபிடிக்கிறது. அதற்கு சீனாவே பொறுப்பு என்ற வகையில் ஒரு உள்ளூரில் தோன்றிய வைரஸ் இன்று இலட்சக்கணக்கான மக்களை பாதித்து உலகையே முடக்கியுள்ளதற்கு பொறுப்பாகியுள்ளது. எவ்வாறாயினும், மேற்கூறிய சொற்களின் பயன்பாடு சீனர்களை களங்கப்படுத்துகிறது. இது ஆசிய அமெரிக்கர்கள் மீதான வெறுப்பை தூண்டுகிறது. மேலும் இந்த வெறுப்பு அரசியல் டிரம்ப்பின் 2020 மறுதேர்தலில் வெற்றி பெற அவர் கடைப்பிடிக்கும் யுக்தி என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உலகமயமாக்கல் கொள்கைகளின் மீது இருந்த அமெரிக்கர்களின் கோபத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைப் பிடித்ததின் மூலம் குடியரசுக் கட்சியை கைப்பற்றிய டொனால்ட் டிரம்ப் கைப்பற்றியது பிரபலமானது. இது அமெரிக்கர்களின் உலகமயமாக்கல் மீதான கோபம் மற்றும் வெறுப்பின் காரணமாகவே நிகழ்ந்தது. டிரம்பின் இந்த யுக்தி வாஷிங்டனின் நீண்டகால சுதந்திர வர்த்தகத்திற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதை செய்தது. முக்கியமாக சீனாவுடனான தடையற்ற வர்த்தகம், மத்திய மேற்கு நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு “ஏற்றுக்கொள்ள முடியாத எதிர் விளைவுகளை” அளிக்கிறது என்று வாதத்தை வைத்து, கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு சீனாவுடன் சுங்கவரி மற்றும் பழிவாங்கும் கட்டணங்களை விதித்து பெரும் வர்த்தகப் போரினை துவக்கி வைத்தார். பின்னர், இறுதியாக சமீபத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிர்ணயித்து சீனாவை அனுமதித்துள்ளார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்று கோஷமிட்டு வெற்றி பெற்ற டிரம்ப்க்கு இது நியாயமாகத் தோன்றினாலும், உலக நாடுகளின் அமெரிக்காவுடனான வர்த்தகம் குறித்த பார்வை மாறியுள்ளதால் அமெரிக்க வர்த்தகத் துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. வாஷிங்டனில் இருந்து இறக்குமதியை கடந்த இரண்டு ஆண்டுகளில்  குறைந்தது 200 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது, அறிவுசார்  மற்றும் தொழில் நுட்பத் திருட்டு குறித்து சீர்திருத்தத்தை நாடுவது என்று சிறிது முன்னேற்றத்தைக் காண்பித்திருந்தாலும், சீனாவை வைத்து திட்டமிட்டிருந்த முதல் அஜண்டா நிறைவேறவில்லை என்றே கூற வேண்டும். எனவே,  2020 தேர்தலுக்கு முன்னதாக உருவாகியுள்ள இந்த, “சீன வைரஸ்” ட்ரம்பிற்கு மீண்டும் ஜனாதிபதியாகும் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகியுள்ளது. டிரம்ப்பும் அதை நன்றாகவே, பயன்படுத்திக் கொள்கிறார்.

ஏற்கனவே, சீனாவுடனான தேவையற்ற வர்த்தகப் போரினை துவக்கிய பின்னர், கடந்த மாதத்தில் டோவ் ஜோன்ஸ் தொழில்துறையின் சராசரி புள்ளிகள் 9,000 ஆக வீழ்ந்தது. பதிலளிக்க வேண்டிய அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் பழியை சீனா மீது போடத்துவங்கினார். சுருக்கமாகக் கூறினால், “ஜனாதிபதி டிரம்பின் பதவியேற்ற நாளிலிருந்து, தனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் அனைத்து வருமான வழிகளையும் அடைத்து இலாபங்களை திறம்பட அழித்து விட்டார்” என்று கூறலாம்.  தொழில்துறை மீட்டெடுப்பு பணிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறிக்கொண்ட டிரம்ப் சமீபத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டார், அதில் “உலகளாவிய பொருளாதார சேதத்திற்கு சீனா தான் காரணம்” என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆகவே, ஏற்கனவே மந்தமடைந்து வரும் அமெரிக்க பொருளாதாரத்தை “சீன வைரஸ்” பயமுறுத்தும் சந்தைகளுடன் சம்பத்தப்படுத்துவது, ட்ரம்பின் ஆதரவு மாநிலங்களிள் அவரது செல்வாக்கை உயர்த்த மேலும் உதவி புரியலாம். 2016 ஆம் ஆண்டில், அந்த மாநிலங்கள் – விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா ஆகியவை டிரம்பை ஜனாதிபதியாக வெள்ளை மாளிகைக்குத் அனுப்பியதில் முக்கிய பங்கு வகித்தன. ஆனால், எதிர்வரும் 2020 தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் துணைத் தலைவருமான ஜோ பிடென் பென்சில்வேனியாவின் “பூர்வீக குடிமகன்” என்ற பெயரை பெற்றிருப்பதால், அந்த மாநிலங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே டிரம்ப் 2016 தேர்தலில் அந்த மாநிலத்தில் 45,000 வாக்குகளுக்கும் குறைவாக பெற காரணமாக இருந்தது. COVID-19 உபயோகப்படுத்தி சீனா மீதான தனது பிடியை நீட்டிக்க முற்படுவதோடு மட்டுமல்லாமல், 1600 பென்சில்வேனியா அவென்யூ NW இல் தங்கியிருப்பதன் மூலம், ட்ரம்ப் அதே கொரோனாவைப் பயன்படுத்தி, அமெரிக்கா – மெக்ஸிகோவுடனான எல்லை பிரச்சனையிலும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சித்து வருகிறார்.

கொரோனாவும் மெக்ஸிகோ-அமெரிக்க எல்லை பிரச்னையும்

டிரம்பின் 2016 தேர்தலில் அவரது வெற்றிக்கு மற்றொரு காரணம் அமெரிக்கர்களின் சமூக மற்றும் கலாசாரம் சார்ந்த உணர்வுகளை தூண்டி ஒன்றிணைத்தது ஆகும். பல்வேறு நாட்டினரின் குடியேற்றத்தால் அதிருப்தி அடைந்திருந்த மக்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக, சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பது, மெக்ஸிகோ – அமெரிக்க எல்லையில் தடுப்பு சுவரை கட்டுவதாக அறிவித்தது மற்றும் அதற்கான நிதி உதவிக்கு அமெரிக்க காங்கிரஸை அணுகி, நிதி துறையில் நேரடி அதிகாரம் செலுத்த முயற்சித்தது என வழிகளையும் பயன்படுத்தினார். ஆனால் காங்கிரஸின் ஜனநாயகவாதிகள் மற்றும் வில் ஹர்ட் (ஆர்-டிஎக்ஸ் -23) போன்ற சில குடியரசுக் கட்சியினரும் இந்த சுவர் ஐடியாவை “21 ஆம் நூற்றாண்டு பிரச்சினைக்கு 4 ஆம் நூற்றாண்டு தீர்வு” வர்ணித்து, நிதியளிப்பதை எதிர்த்தனர். இதற்காக, ட்ரம்ப் ஓரிரு சந்தர்ப்பங்களில் சிறு சிறு அளவிலான நிதியுதவி பெற்றிருந்தாலும், ஹில்லில் அவரது அரசியல் எதிர் கட்சியினர், எல்லை பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர கான்கிரீட் சுவரை அல்ல என வாதிட்டு தடுத்து விட்டனர். அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடல் வரை சுவர் எழுப்புவதை விட, சென்சார்கள், கேமராக்கள் என தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஊடுருவல்களைக் கண்காணிக்க ஆலோசிக்க வலியுறுத்தினர்.

டிரம்ப் நிர்வாகத்தின் இது போன்ற முயற்சிகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. உதாரணமாக, மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதமாக எல்லையைத் தாண்டியவர்களின் புகலிடம் வேண்டி விண்ணப்பித்தவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாக கூறிய வெள்ளை மாளிகையின் அறிவிப்பு 2018 இல் நீதிமன்றத்தின் மூலம் தடை செய்யப்பட்டது.  கடந்த மாதம், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள 9 வது அமெரிக்க சுற்று மேல்முறையீட்டு நீதிமன்றமும் அந்தக் கொள்கைக்கு ஒரு தடை உத்தரவை பிறப்பித்தது. அதனுடன் தஞ்சம் கோரும் புலம்பெயர்ந்தோர் அவர்களின் வழக்குகள் நடைமுறையில் இருக்கும் போது மெக்ஸிகோவில் தங்கியிருக்க வேண்டும் என்ற மற்றொரு டிரம்ப்பின் மற்றொரு அறிவிப்பும் தடை செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய கொரோனா நெருக்கடியை டிரம்ப் மெக்ஸிகோவுடனான எல்லைக் கொள்கையிலும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முயன்று வருகிறார்.  மெக்சிகோவில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 15000 என்ற அளவில் இருந்த போதிலும், 10 இலட்சம் நோயாளிகளைக் கொண்டுள்ள டிரம்ப், கொரோனாவை ஒரு போலிக் காரணமாகக் காட்டி புகலிடம் வேண்டும் மெக்ஸிகோ நாட்டினர் மட்டுமென்றி அனைத்து மெக்ஸிகன்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற திட்டத்தினை டிரம்ப் நிர்வாகம் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதேப்போல கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வரும் வேளையில், ஈரான் குறித்த தனது கொள்கையை மேலும் வலுப்படுத்தவும் டிரம்ப் முயன்று வருகிறார்.

கொரோனாவும் ஈரானில் ஆட்சி மாற்றமும்

‘எதிலும் அமெரிக்காவே முதலிடம்” என்ற உலகளாவிய கண்ணோட்டம் ஈரானின் பின்தங்கிய கண்ணோட்டத்திற்கு எதிலும் குறைந்ததல்ல. தெஹ்ரானின் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் பிராந்தியங்களின் மீதான தற்போதைய ஈரான் ஆட்சியாளர்களின் பிடியை பலவீனப்படுத்துவது ட்ரம்ப் அவர்களின் நோக்கம். இதைக் காரணம் காட்டி, கூட்டு விரிவான செயல் திட்டத்திலிருந்து (ஜே.சி.பி.ஓ.ஏ) – அதாவது ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் விலகியதைத் தொடர்ந்து, உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய மேலதிகாரிகளை இலக்காகக் கொண்ட பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். மேலும் இராணுவத் நடவடிக்கைகளும், தாக்குதல்கள் கூட மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெனரல் காஸிம் சுலைமானியைக் கொன்ற அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஆகவே, கொரோனா காரணமாக ஈரானில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐத் தாண்டியிருக்கும் இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை ஒன்பது நிறுவனங்கள் மற்றும் மூன்று உயர்மட்ட நபர்களை இலக்காகக் கொண்டு, “ஈரானிய ஆட்சியை செயல்படுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களின், வன்முறை நடத்தை.” என்ற ஒரு போலியான காரணத்தை அடுக்கி, கூடுதல் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.

இதனால், 27,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளைப் பெற்று, ஈரான் உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாகும் நிலை ஏற்பட்டுள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் ‘அதிகபட்ச அழுத்தம் மற்றும் தவறான பிரச்சாரத்தின் கீழ் பொருளாதாரத் தடைகள் ஒரு தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் “மருந்துகள் உட்பட மனிதாபிமான இறக்குமதிகளுக்கு நிதியளிக்கும் ஈரானின் திறன் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண ஈரானியர்களுக்கு கடுமையான கஷ்டங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவர்களின் சுகாதாரம் சார்ந்த தனி மனித உரிமைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது.

இநிலையில் மேலும் ஒரு நடவடிக்கையாக, கொரோனா தொற்றை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கான தெஹ்ரானின் கோரிக்கையை வாஷிங்டன் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், வைரஸ் ஈரானின் அரசியல் உயர்மட்டக் குழுவினரையும் பாதித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சுமார் ஒரு டஜன் உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்களில் ஈரான் ஆட்சித்தலைவரின்  ஆலோசகரும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது. டிரம்ப்பின் ஈரானில் அதன் ஆட்சி மாற்றக் கொள்கைக்கு தற்செயலான இந்த நிகழ்வுகளையும் சாதகமாகப் பயன்படுத்தி ஆதாயங்களை பெற அவரின் நிர்வாகம் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. .

கொரோனா வைரஸ் தொற்றுநோயை தனது எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறவைக்கும் சாதக நிகழ்வாக மாற்றிக் கொள்ள முற்பட்டு அரசியல் செய்வது தொற்றுநோயால் ஏற்படும் அச்சுறுத்தலை விட கொடுமையானது என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலக அளவில் தொற்றுநோய்க்கு ஒரு ஒருங்கிணைந்த தீர்வைக் கண்டறிய முயலாமல் ஒரு அமெரிக்க ஜனாதிபதியே கொரோனாவை அரசியலாக்குவது, சீனா, மெக்ஸிகோ மற்றும் ஈரானுடன் ‘அமெரிக்காவுக்கே முதலிடம்” என்ற கண்ணோட்டத்தை முன்வைப்பது வரை, அமெரிக்காவை உலக நாடுகளிடையே ஒரு கேலிக்குரியதாக்கியுள்ளது.

ஆங்கில மூலம்:  காஷிஷ் பர்பியானி

தமிழில்: லயா