அமெரிக்காவில், கொரோனா பரவலின் மையப்பகுதியாக நியூயார்க் மாறியுள்ளதை அடுத்து, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக, மருத்துவமனைகள், வீட்டுஅத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கூடங்கள் போன்ற அன்றாட தேவைகளை பூர்த்திசெய்யும்   வணிக நிறுவனங்களைத் தவிர மற்ற அனைவரையும் வீட்டிலேயே இருந்து வேலை செய்யுமாறு நியூயார்க்கின் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ இதைப்பற்றி கூறும்போது, “முழுமையான இந்த அடைப்பு வேலை இழப்பு, வருமான இழப்பு மற்றும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும்” என்று ஒப்புக் கொள்கிறார். ஆனாலும், “தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், கொரோனா தமது ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பை ஸ்தம்பிக்க வைக்கும் முன் அதை எதிர்கொள்ள ஒரே வழி இதுதான்” என்றார்.

மேலும்,“நியூயார்க் முற்றிலும்வேறுபட்ட நிலையில் இருப்பதையும், நாங்கள் ஏன் இந்த நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்பதையும் நீங்கள் காணலாம்” என்று திரு கியூமோ செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நடைமுறைக்கு வரும்.

இதுமட்டுமின்றி, இணங்காதவர்களுக்கு அபராதம் மற்றும் வணிக உரிமை ரத்துக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும்எச்சரித்தார். மேலும் அவர் கூறியது இங்கே குறிப்பிடத்தக்கது “இவை எந்த அளவிற்கு பயனளிக்க போகிறதென்று தற்போது தெரியவில்லை”.

புதிய நடவடிக்கைகளில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கான தடைகள் மற்றும் அத்தியாவசிய வெளிப்புற நடமாட்டங்களை தவிர மற்ற அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அனைத்தையும் பொதுவாகக் கூறுவதானால், அமெரிக்கா தனது தினசரி நடவடிக்கைகளை முற்றிலுமாக, பல மாதங்கள் நீடிக்கும் வகையில் முடக்கவுள்ளது. இந்நகரில் ஏற்கனவே, உணவகங்கள், தியேட்டர்கள் மற்றும் அருங்காட்சியகங்களை, போரின் காலங்களில் கூட இல்லாத வகையில் மூடப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவின் ஆளுநர் கவின் நியூசோம் தனது மாநிலத்தின் 40 மில்லியன் மக்களுக்கு கட்டுபாடுகள் விதித்த அடுத்த நாள் இது நடைப்பெற்றுள்ளது.

மார்ச் 20, வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, நியூயார்க் நகரின் 4,408 நோயாளிகள் உட்பட மொத்த மாநிலத்தில் 7,102 கொரோனா வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது வாஷிங்டன் (1,376 பேர்),  கலிபோர்னியாவை (1,044) விட அதிகம் ஆகும். இதுவரை,  நியூயார்க்கில் 1,255 பேர் வைரஸால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது அதன் மொத்த எண்ணிகையில் 18% ஆகும். ஆனால் 16 நாட்களுக்கு முன்பு, இம்மாநிலத்தில் யாரும் வைரஸால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. எண்ணிகையின் தீவிர அதிகரிப்புக்கு ஒரு சோதனை முயற்சியே காரணமாகக் கூறப்படுகிறது.  திரு.கியூமோவின் கூற்றுப்படி, இப்போது இவர்கள் எண்ணிக்கையில் சீனா மற்றும் தென் கொரியாவிற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

வைரஸின் பரவலை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை திரு.கியூமோ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஏனெனில், மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில், அதுவும் குறுகியக் காலத்தில் செய்வது என்பது அரசுக்கு பெரும் சவாலாக இருக்க போகிறது.

ஏற்கனவே உள்ள கட்டிட வசதிகளை சுகாதாரம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்ற, இராணுவத்தை சேர்ந்த இன்ஜினியர்களுடன் இணைந்து வேலைத் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக நியூயார்க் நகரத்தின் ஜாவிட்ஸ் மாநாட்டு மையம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக தங்குமிடங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டு, மாநிலத்தின் சுமார் 50,000 மருத்துவமனை படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்படும்.

இதற்கிடையில், கையுறைகள், முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு கவர்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்களின் மூலப்பொருட்களுக்கு அரசு உரிய கட்டணத்தை செலுத்துமென்றும் உறுதியளித்துள்ளார்.  மேலும் அவற்றின் உற்பத்திக்கான நிதி வழங்கவும் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சுவாசிக்க உதவும் வெண்டிலேட்டர்கள் தற்போதைய இன்றியமையாத தேவையாகவும் கூறியுள்ளார். அதைப்பற்றி அவர் கூறும்போது, இரண்டாம் உலகப்போரில் ஏவுகணைகள் எப்படியோ, அதுப்போல இன்றைய போருக்கு வெண்டிலேட்டர்கள்” என்றார்.

பரிந்துரைக்கப்பட்டவை: சில நிறுவனங்கள் நெருக்கடி நேரத்தில் ‘அத்தியாவசியமானவை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசிய தேவைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சுமார் 5,000 முதல் 6,000 வரை உள்ளது. ஆனால் தற்போதைய தேவையோ, 30,000 வரை ஆகும். திரு கியூமோ மேலும் கூறியதாவது, மற்ற மாநிலத்தவர்களும் அத்தியாவசிய உபகரணங்களை வாங்குவதால் பற்றாக்குறை நிலவுவதாக கூறினார்.

திரு கியூமோ மற்றும் நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோ, இன்னும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமீப நாட்களில் மோதிக்கொண்டனர். அப்படி ஏதேனும் இருந்தால் ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரு கியூமோ திரு டி ப்ளாசியோவின், “இருக்கும் இடத்திலேயே இருத்தல்” என்ற யோசனை தவறானது என்றும், கலவர நேரங்களிலும், நியூக்ளியார் போர் சமயங்களிலும் மட்டுமே பயன்படுத்தக் கூடியது என்று கூறி எதிர்த்தார்.

அதற்கு பதிலாக கவர்னர் “நியூயார்க்கை தற்காலிகமாக முடக்குதல்” என்ற யோசனையை முன் வைத்தார். தற்போதைய சூழ்நிலையில் “அத்தியாவசிய தேவைகள் மற்றும் வணிகம்” என்பதெல்லாம் என்னென்ன என்று அரசு அதிகாரிகள் வரையறுக்க முயற்சித்துக் கொண்டிருப்பதால் இது கடுமையை நீர்த்து விடுமென அஞ்சப்படுகிறது.

எதிர்வரும் சுமையை குறைக்க, திரு கியூமோ, மாநிலத்தில் வணிகம் சார்ந்த மற்றும் பொதுமக்களின் வெளியேற்றத்தை அடுத்த 90 நாட்கள் முற்றிலுமாக தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதைப்பற்றி அவர் கூறும்போது, “நாங்கள் செய்ததை வைத்து மக்களை வீட்டில் வேலையின்றி இருக்கபோகிறார்கள் என்பதை அறிவோம். ஆனாலும், அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை விரும்பவில்லை, ” என்று கூறினார்.

நியூயார்க்கில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, எதிர்வரும் நெருக்கடியின் அளவு இன்னும் தெளிவாகத் தெரிகிறது. இதனால் டிரம்ப் நிர்வாகத்துடனான நீண்டகால முரண்பாடுகள் வெளிப்படையாக வெடிக்க ஆரம்பித்துள்ளன.

டொனால்ட் ட்ரம்ப் அரசு, ஜனநாயகக் கட்சியின் பெரும் ஆதரவுப் பகுதியான நியூயார்க் நகரத்தை பழிவாங்குவதாகக் கூறி, கடந்த வெள்ளிக்கிழமை, அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் தற்போது நியூயார்க் நகர மக்களின் உரிமைகளைப் பற்றி வெள்ளை மாளிகையில் இருந்துக் கொண்டு எங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று அறிவித்துள்ளார். மேலும், மேயர் கூறும்போது, “நியூயார்க் தேவையை பூர்த்தி செய்யும் அளவில் நாடெங்கிலும் உள்ள இராணுவக் கிடங்குகளில் மருத்துவப் பொருட்களின் இருப்பு இருந்தன” என்றும் கூறினார்.

அவர் திரு. டிரம்பையும் அவரது கூட்டாட்சியின் மீதான தாமதமான நடவடிக்கைகளையும் விமர்சித்த திரு. கியூமோ சமீபத்திய நாட்களில் தனது தொனியை மாற்றியுள்ளார். இராணுவ இன்ஜினியர்களின் உதவியை கோரிய தனது அழைப்பை ஒருவழியாக ஏற்றுக் கொண்டதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலின் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இன்று 26, மார்ச் நிலவரப்படி, உலகளவில் 471311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸின் விளைவாக இறந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ எண்ணிக்கை 21293 பேர்.

கொரோனா பரவல் உலக சுகாதார அமைப்பால் ஒரு பெரும் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேகமாக பரவி வருகிறது. 198 நாடுகளிலும், ஒரு இன்டர்நேஷனல் கப்பலிலும் (யோகோஹாமா துறைமுகம், ஜப்பான்)    இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வெள்ளிகிழமை வரை, கொரோனா வைரஸின் மையப்பகுதி ஐரோப்பாவாகும். சீனாவிற்கு அடுத்தப்படியாக,  இத்தாலியில் அதிக எண்ணிக்கையிலான உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிஇருந்தது. மேலும் உச்சகட்ட பரவலாக, சீனாவில் இருந்ததை விட இத்தாலி மற்றும் ஸ்பெயினில் இறப்பு எண்ணிக்கை மிக விரைவாக வளர்ந்து வந்தது. ஆனால், இன்று 27 மார்ச், வெள்ளி மாலை நிலவரப்படி,  அமெரிக்கா, கொரோனா பரவலில், உலகிலேயே அதிகப்படியான கொரோனா நோயாளிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், சீனாவைப் பின்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் நோயாளிகள் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 33 % என்ற வேகத்தில் அதிகரித்து வருகிறது, இது மற்ற நாடுகளும் விரைவில் இத்தாலி போன்ற சவாலை எதிர்கொள்ளக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். நோயாளிகளின் எண்ணிக்கை வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால், ஆசிய நகர-மாநிலமான சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கின் மற்றொரு கோணத்தில் உள்ளன. மிக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கைகளின் மூலம் நோயாளிகளின் அதிகரிப்பு விகிதம் இதுவரை ஒப்பீட்டளவிலேயே உள்ளது. அதாவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. உலகெங்கிலும் சுமார் 68 நாடுகளில் இப்போது குறைந்தது 100 உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. அதில் இந்தியாவும் ஒன்று.

மனிதகுலம் இப்போது உலகளாவிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இது தற்போதைய தலைமுறை தன வாழ்நாளில் காணும் மிகப்பெரிய நெருக்கடியுமாகும். அடுத்த சில வாரங்களில் மக்களும் அரசாங்கங்களும் எடுக்கும் முடிவுகள் உலகின் வரவிருக்கும் ஆண்டுகளை வடிவமைக்கும் ஒரு மிகப்ரிய காரணியாக இருக்கும். அவை நமது சுகாதாரக் கட்டமைப்புகளை மட்டுமல்லாது, நமது பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாச்சாரத்தையும் தீர்மானிக்கும்.எனவே இது நாம் விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்பட வேண்டிய தருணமாகும். அத்தோடு, நமது செயல்களின் நீண்டகால விளைவுகளையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​உடனடி அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்பது மட்டுமல்லாமல், புயல் கடந்தவுடன் நாம் வசிக்கும் உலகம் எவ்வாறு இருக்கும் என்பதையும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஆம், புயல் கடந்து செல்லும். மனிதகுலமும் உயிர்வாழும்.  நம்மில் பெரும்பாலோர் இன்னும் உயிருடன் இருப்பார்கள் – ஆனால் நாம் வாழும் உலகம் மாறியிருக்கும்.

பல குறுகிய கால அவசர நடவடிக்கைகள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறும். பொதுவாகவே அதுதான் அவசரநிலைகளின் தன்மை ஆகும். அவை வரலாற்றில் பல செயல்முறைகளை வேகமாக முன்னெடுத்துச் செல்கின்றன. சாதாரண காலங்களில் பல வருடங்கள் விவாதிக்கக்கூடிய முடிவுகள், சில மணிநேரங்களில் முடிவெடுத்து நிறைவேற்றப்படுகின்றன. முதிர்ச்சியடையாத மற்றும் ஆபத்தான தொழில்நுட்பங்கள் கூட சேவையில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுகின்றன. ஏனெனில் எதுவும் செய்யாததால் ஏற்படும் இழப்புகள் அதைவிட பெரிதாக இருக்கும். ஒரு நாடே முழுவதுமாக, மிகபெரிய சமூக சோதனையில் பரிசோதனை விலங்குகளாக ஆக்கப்டுகின்றன. எல்லோரும் வீட்டிலிருந்து வேலை செய்து, தொலைவில் இருப்பவர்களிடம் தொடர்பு மட்டுமே கொள்ளும்போது என்ன நடக்கும்? முழு பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் ஆன்லைனில் நடக்கும் போது என்னவாகும்? சாதாரண காலங்களில், அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் கல்வி வாரியங்கள் இதுபோன்றதொரு பரிசோதனைகளில் ஈடுபட ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது. ஆனால் இவை சாதாரண நேரங்கள் அல்ல.

நெருக்கடியான இந்த நேரத்தில், நாங்கள் இரண்டு முக்கியமான அம்சங்களை தேர்ந்தெடுத்துள்ளோம். முதலாவது  ஒட்டுமொத்த வலுக்கட்டாயமான கண்காணிப்புக்கும் குடிமக்களின் மேம்பாட்டிற்கும் இடையில் உள்ளது. இரண்டாவது தேசிய அளவிலான  தனிமைக்கும் உலகளாவிய ஒற்றுமைக்கும் இடையில் உள்ளது.

நமது தோலுக்கு கீழேயும் நாம் கண்காணிக்கப்பட வேண்டும்.

தொற்றுநோயைத் தடுக்க, அனைத்து மக்களும் அறிவிக்கப்படும்  வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும். இதை அடைய இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. மக்களை கண்காணிப்பதும், விதிகளை மீறுபவர்களை தண்டிப்பதும் ஒரு முறை. இன்று, மனித வரலாற்றில் முதல்முறையாக, தொழில்நுட்பம் அனைவரையும் எல்லா நேரத்திலும் கண்காணிக்க உதவுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, கேஜிபியால் 240 மில்லியன் சோவியத் குடிமக்களை 24 மணி நேரமும் பின்தொடர முடியவில்லை அல்லது சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் திறம்பட பரிசீலிக்க முடியவில்லை. கேஜிபி தனது ஏஜெண்டுகளையே நம்பியிருந்தது. மேலும் ஒவ்வொரு குடிமகனையும் கண்காணிக்க தனித்தனி ஏஜெண்டுகளை நியமிக்க முடியாது. ஆனால் இப்போது அரசாங்கங்கள் அனைவரையும் கண்காணிக்க மனித ஏஜண்டுகளுக்கு பதிலாக எங்கும் நிறைந்த சென்சார்கள் மற்றும் சக்திவாய்ந்த கணக்கீடுகளை கொண்டுள்ளன.

 

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில் பல நாடுகள்  ஏற்கனவே புதுப்புது கண்காணிப்புக் கருவிகளை பயன்படுத்துகின்றன. இதில் சீன அரசு பயன்படுத்திய யுக்தி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மக்களின் ஸ்மார்ட்போன்களை உன்னிப்பாகக் கண்காணித்ததின் மூலமும், நூற்றுக்கணக்கான மில்லியன் முக அடையாளம் காணும் கேமராக்களைப் பயன்படுத்தியதன் மூலமும், அவர்களின் உடல் வெப்பநிலை மற்றும் மருத்துவ நிலையை சரிபார்த்து அறிக்கை அளிக்க மக்களை கட்டாயப்படுத்தியதன் மூலமும், சீன அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய கொரோனா வைரஸ் கேரியர்களை விரைவாக அடையாளம் கண்டது மட்டுமல்லாமல், அவர்களின் நடமாட்டம் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் பல மொபைல் செயலிகள் அதன் வரம்புக்குள் இருந்த பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்டறிந்து மக்களை எச்சரித்ததும் நடந்தது.

இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பற்றி

இந்த கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் இத்தாலியின் வெறிச்சோடிய தெருக்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் கேமராக்களில் இருந்து புகைப்படக் கலைஞரான கிரேசியானோ பன்ஃபிலி அவர்களால், பெறப்பட்டு இங்கு வெளியிடப்படுகிறது.

இந்த வகையான தொழில்நுட்பம் கிழக்கு ஆசியா நாடுகளில் மட்டுமின்றி, இஸ்ரேலியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தீவிரவாதிகளை கண்காணிப்பது தொடங்கி, முடக்கப்படும் ஆணையை மீறி வெளியில் நடமாடுபவர்களை கண்காணிக்கவும், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு முகமைக்கு அங்கீகாரம் வழங்கினார். சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற துணைக்குழு இந்த நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க மறுத்தபோது, ​​நெத்தன்யாகு அதை “அவசரகால ஆணை” மூலம் நடைமுறைப்படுத்தினார்.

மேலோட்டமாக பார்க்கும்போது இந்த நடைமுறைகளில் புதிதாக எதுவும் இல்லை என்று நீங்கள் வாதிடலாம். சமீபத்திய ஆண்டுகளில், அரசாங்கங்களும் நிறுவனங்களும் மக்களைக் கண்காணிக்கவும், கையாளவும் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. நாம் தற்போது கவனகுறைவாக விட்டுவிட்டால் ஒரு வைரஸ் தொற்றுநோய், நமது வரலாற்றில், மக்கள் கண்காணிப்பு நிகழ்வின் வரலாற்றில் தவிர்க்க இயலாத வடுவாக மாறிவிடும். மக்கள் கண்காணிப்பை இதுவரை நிராகரித்து வந்த நாடுகளும், அதைவிட புதிய மற்றும் கடுமையான தொழில்நுட்பங்களை பயன்படுத்த முவந்திருப்பதை பார்க்கும்போதே, தொற்றுக்கு உள்ளானவர்கள், உள்ளாகியிருக்கும் சாந்த வட்டத்துக்குள் வந்தவர்கள் என அனைவரையும் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருப்பதாக தெரிகிறது. மேலும், அதைவிட “தோலுக்கு மேல்” இருந்து கண்காணித்தல் என்பதில் இருந்து “தோலின் கீழும்” கண்காணிக்க வேண்டும் என்ற வியத்தகு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

அதாவது, இதுவரை உங்கள் விரல் உங்கள் ஸ்மார்ட்போனின் திரையைத் தொட்டு ஒரு இணைப்பைக் கிளிக் செய்தபோது, ​​உங்கள் விரல் எதைக் கிளிக் செய்கிறது என்பதை மட்டுமே அரசாங்கம் அறிய விரும்பியது. ஆனால், கொரோனா வைரஸ் பரவலுக்கு பின், அதன் ஆர்வம் மற்றும் கவனம் திரும்பியுள்ளது. நீங்கள் எதை கிளிக் செய்தீர்கள் என்பது மாறி, கிளிக் செய்த உங்கள் விரலின் வெப்பநிலையையும், அதன் தோலின் கீழ் உள்ள இரத்த அழுத்தத்தையும் தற்போது அறிய விரும்புகிறது.

அவசரக்காலமும் “பழக்கூழும்”

கண்காணிப்பு என்பதில் தற்போதுள்ள பிரச்னை என்னவெனில், நாம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறோம் என்பதும், வரவிருக்கும் ஆண்டுகளில் மேலும் என்ன நேரக்கூடும் என்பதும் எவருக்கும் தெரியாது. கண்காணிப்பு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் புனைகதையில் தோன்றியவை எல்லாம் இன்று நம் கண்முன் நிஜமாகியுள்ளது. ஒரு கற்பனையாக, ஒவ்வொரு குடிமகனும் 24 மணிநேரமும் உடல் வெப்பநிலையையும் இதயத் துடிப்பையும் கண்காணிக்கும் ஒரு பயோமெட்ரிக் காப்பு அணிய வேண்டும் என்று அரசு கோருவதாக கற்பனையான செய்யுங்கள். இதன் விளைவாக கிடைக்கும் தரவுகளை பரிசீலித்து, நீங்கள் நோய்வாய்பட்டிருக்கிறீர்கள் என்பதை  நீங்கள் அறிவதற்கு முன்பே அரசு அறிந்துக் கொள்ளும். மேலும் நீங்கள் எங்கிருந்தீர்கள், யார் சந்தித்தீர்கள் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வார்கள். ஒருவேளை அது தொற்று நோயாக இருப்பின், நோய்த்தொற்றின் சங்கிலி தொடர் கண்டறியப்பட்டு எளிதாக தடுக்கப்படலாம். இத்தகைய அமைப்பு ஒரு தொற்று நோய் பரவலை சில நாட்களில் தடுத்துவிடும். இது மிக நல்ல யோசனையாகத் தெரிகிறது, இல்லையா?

இது கண்டிப்பாக ஒரு புதிய, சட்டபூர்வமான, உண்மைத் தன்மை வாய்ந்த கண்காணிப்பு அமைப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதில் உள்ள மற்றொரு பக்கம், வேறு மாதிரியான எதிர்மறை கோணம் ஆகும். உதாரணமாக, ஒருவர் CNN இணைப்பைக் காட்டிலும் ஒரு FOX NEWS இணைப்பைக் அதிகமாக கிளிக் செய்கிறார் என்பது அறிந்தால், அவரது அரசியல் பார்வைகளைப் பற்றியும், அவரது ஆளுமை, விருப்பங்கள் பற்றியும் அது அரசுக்கு சொல்லக்கூடும். அவர் ஒரு வீடியோ கிளிப்பைப் பார்க்கும்போது அவரது உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பில் நிகழும் மாற்றங்களை வைத்து கண்காணிக்க முடிந்தால், அரசுக்கு ஒருவரை சிரிக்க, அழ வைப்பது என்ன, அவரை உண்மையிலேயே கோபப்படுத்துவது எது என்பதையும் சேர்த்தே அரசு கண்காணிக்க முடியும்.

ஒரு இருமல் போன்றே, கோபம், மகிழ்ச்சி, சலிப்பு மற்றும் காதல் ஆகியவையும் உயிரியல் நிகழ்வுகள் என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இருமலை அடையாளம் காணும் அதே தொழில்நுட்பமும் சிரிப்பை அடையாளம் காணக்கூடும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அரசாங்கங்களும் நம் பயோமெட்ரிக் தரவை பெருமளவில் வாங்கி பயன்படுத்தத் தொடங்கினால், அவர்கள் நம்மை, நாம் அறிந்ததை விட மிகச் சிறப்பாக அறிந்து கொள்ள முடியும், மேலும் அவர்கள் நம் உணர்வுகளை கணிக்க மட்டுமின்றி, நம் உணர்வுகளை கையாளவும், அவர்கள் விரும்பும் எதையும் நமக்கு விற்கவும் முடியும். எனவே இது ஒரு தொழில்நுட்ப தயாரிப்பு அல்லது ஒரு தேர்ந்த அரசியல்வாதியுமாக இருக்கும். பயோமெட்ரிக் கண்காணிப்பு என்பதுடன் ஒப்பிட்டால் தற்போதைய கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவின் தரவு ஹேக்கிங் தந்திரங்கள் எல்லாம் கற்காலத்திலிருந்து வந்ததைப் போல தோற்றமளிக்கும். 2030 ஆம் ஆண்டில் வட கொரியாவை கற்பனை செய்து பாருங்கள், ஒவ்வொரு குடிமகனும் 24 மணி நேரமும் ஒரு பயோமெட்ரிக் காப்பு அணிய வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டு, அந்நாட்டின் பெரும் தலைவரின் உரையை கேட்டு அக்குடிமகன் கோவம் கொள்கிறார் என்று அந்த காப்பு சொல்லும் பயோமெட்ரிக் அறிகுறிகளை வைத்து அவர்கள் அறிய நேர்ந்தால், அவரின் கதை முடிந்தது.

அவசரகால சூழ்நிலையில் எடுக்கப்படும் ஒரு தற்காலிக நடவடிக்கையாக இந்த பயோமெட்ரிக் கண்காணிப்பு யோசனையைக் கருத முடியும். அவசரநிலை முடிந்ததும் அது நீக்கப்படலாம். ஆனால் தற்காலிக நடவடிக்கைகள் பல அவசரநிலை முடிந்த பின்னும் நீடிக்கும் ஒரு மோசமான பழக்கத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக ஒரு புதிய அவசரநிலை எப்போதும் வரலாம் என்ற காரணத்தோடு. உதாரணமாக, இஸ்ரேல், 1948 ஆம் ஆண்டு சுதந்திரப் போரின்போது அவசரகால நிலையை அறிவித்தது. இது பத்திரிகை தணிக்கை, நிலத்தை பறிமுதல் செய்வதிலிருந்து, பழக்கூழ் (PUDDING) தயாரிப்பதற்கான சிறப்பு விதிமுறைகள் அறிவித்தது வரை என பல தற்காலிக நடவடிக்கைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தியது. பின்னர் சுதந்திரப் போர் வென்று நீண்ட காலமாகியும், இஸ்ரேல் ஒருபோதும் அவசரநிலையை நீக்கி அறிவிக்கவில்லை. மேலும் 1948-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பல “தற்காலிக” நடவடிக்கைகள் சுதந்திரத்திற்கு பின்னும் ரத்து செய்யப்படவில்லை (அந்த அவசரகால PUDDING தயாரிப்பு வழிமுறைகள் மட்டும் 2011-ல் இரக்கத்துடன் ரத்து செய்யப்பட்டது).

கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் ஒழிக்கப்பட்ட பின்னரும் கூட, சில தகவல் பசிக் கொண்ட அரசு அல்லது பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் இந்த பயோமெட்ரிக் கண்காணிப்பு முறைகளை தொடர்ந்திட வலியுறுத்தலாம். இரண்டாவது முறை கொரோனா தொற்று அல்லது மத்திய ஆப்பிரிக்காவில் ஒரு புதிய எபோலா மியூட்டேசன் வகை பரவல் அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தை முன்வைக்கலாம். மக்களின் அந்தரங்கத் தனியுரிமை பாதுகாப்புத் தொடர்பாக சமீபத்திய ஆண்டுகளில் ஒரு பெரிய எழுச்சி எற்பட்டு வருகிறது. ஆனால், கொரோனா வைரஸ் நெருக்கடி அந்த எழுச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கலாம். ஏனெனில், தனியுரிமை பாதுகாப்புக்கும், மக்களின் ஆரோக்கியத்திற்கும் இடையில் தேர்வு செய்யும் வாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுமானால், ​​அவர்கள் பொதுவாக ஆரோக்கியத்தையே தேர்ந்தெடுப்பார்கள்.

சோப்பும் போலிஸும்

தனியுரிமை பாதுக்காப்புக்கும், ஆரோக்கியத்திற்கும் இடையில் தேர்வு செய்யுமாறு மக்களைக் கேட்பது உண்மையில் பிரச்சினையின் ஆரம்பம் ஆகும். ஏனெனில் இது தவறான கேள்வி மற்றும் தேர்வுமாகும். ஏனெனில், தனியுரிமை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் மக்கள் பெற முடியும். இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கிய பாதுகாப்பு மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை நிறுத்துதலை நாம் தேர்வு செய்யலாம், ஆனால் அது இம்மாதிரியான சர்வாதிகார தன்மையுள்ள  கண்காணிப்பை நிறுவுவதன் மூலம் அல்லாமல், மாறாக குடிமக்களை மேம்படுத்துவதன் மூலம் செய்ய பணிக்கலாம். சமீபத்திய வாரங்களில், கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மிக வெற்றிகரமான முயற்சிகள் தென் கொரியா, தைவான் மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றால் திட்டமிடப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாடுகள் கண்காணிப்பு வழிமுறைகள் சிலவற்றைப் பயன்படுத்தினாலும், அவை விரிவான பரிசோதனை, நேர்மையான அறிக்கையிடல் மற்றும் நன்கு அறியப்பட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை கொண்டே நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஒரு மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மற்றும் கடுமையான தண்டனைகள் மட்டுமே பயனளிக்கும் வழிகாட்டுதல்களை பெறுவதற்கான ஒரே வழி அல்ல. மக்களுக்கு ஒரு புதிய விஞ்ஞான வழிமுறைகள் சொல்லப்படும்போது, ​​அதை சொல்லும் அரசு அதிகாரிகளை மக்கள் நம்பும்போது, அரசு மக்களின் தோள்களில் அமர்ந்து கண்காணிப்பதன் அவசியமின்றி மக்களே எது சரியோ அதை செய்விக்க முடியும். ஒரு சுய-உந்துதல் மற்றும் நன்கு தகவல் விளக்கப்பட்ட மக்கள், போலிஸ் கண்காணிப்புடன் கூடிய, அறியாமையில் உள்ள மக்களை விட மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள்.

உதாரணமாக, மக்கள் சோப் உபயோகித்து கைகளை கழுவுவதைக் கவனியுங்கள். இது மனித சுகாதாரத்தின் மிகப்பெரிய முன்னேற்றங்களில் ஒன்றாகும். இந்த ஒரு எளிய செயல் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுகிறது. சோப்பால் கைகளை கழுவுவதன் முக்கியத்துவத்தை விஞ்ஞானிகள் 19 ஆம் நூற்றாண்டில் மட்டுமே கண்டுபிடித்தனர். முன்னதாக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூட ஒரு அறுவை சிகிச்சை முடித்து, அடுத்த சிகிச்சைக்கு கைகளை சுத்தப்படுத்தாமலேயே தொடர்ந்தனர். ஆனால், இன்று தினமும் பில்லியன் கணக்கான மக்கள் சோப்பால் கைகளை சுத்தம் செய்கின்றனர். மக்கள் இதை செய்வது போலிசுக்கு பயந்து அல்ல. மாறாக அவர்கள் கைகளில் உள்ள கிருமிகள் நோய்களை ஏற்படுத்தத், உயிர்களைக் கொல்லக் கூடியது என்ற உண்மையை புரிந்துக் கொண்டதால் ஆகும்.

ஆனால் அத்தகைய இணக்கம் மற்றும் ஒத்துழைப்பை அடைய, மக்கள் அரசை, அரசு அதிகாரிகளை நம்ப வேண்டும். அரசு முன்வைக்கும்  அறிவியலை நம்ப வேண்டும். தை விளம்பரப்படுத்தும் ஊடகங்களை நம்ப வேண்டும். கடந்த சில ஆண்டுகளில், பொறுப்பற்ற அரசு, அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் அவர்களின் மீதான நம்பிக்கையை குறைக்கும் செயலில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இப்போதும் இதே பொறுப்பற்றவர்கள் தான் சர்வாதிகாரத்தினை வளர்க்கும் பொருட்டு பொதுமக்களை நம்ப முடியாது, என்று கண்காணிப்பிற்கு ஆதரவாக வாதிடுகின்றனர்.

பொதுவாக, பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டுவிட்ட நம்பிக்கையை ஒரே இரவில் மீண்டும் உருவாக்க முடியாது. ஆனால் இவை சாதாரண நேரமல்ல. நெருக்கடியின் ஒரு தருணத்தில், மக்களின் மனமும் விரைவாக மாறக்கூடும். உங்கள் உடன்பிறப்புகளுடன் பல ஆண்டுகளாக ஒருவர்  மனக்கசப்புடன் இருந்திருந்தாலும், ஒரு நெருக்கடியான நேரத்தில் அதுவரை மறந்திருந்த பாசம் மற்றும் நம்பிக்கையை உணர்ந்து ஒருவருக்கொருவர் உதவ முற்படுவதில்லையா? அதுபோலதான்! ஒரு கண்காணிப்பை கட்டவிழ்த்து விடும் ஆட்சியைக் ஏற்படுத்துவதற்கு பதிலாக, அரசின் மீது, அறிவியலின் மீது மற்றும் அதிகாரிகள் மீதும் நம்பிக்கையை உருவாக்க இன்னும் தாமதம் ஏற்படவில்லை. ஒரு நெருக்கடியான நேரத்தில் புதிய தொழில்நுட்பங்களையும் நாம் நிச்சயமாகப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த தொழில்நுட்பங்கள் குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும். ஒரு குடிமகன் தனது உடல் வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க ஒத்திசைய வேண்டும். ஆனால், அந்த தகவல் ஒரு சர்வாதிகார அரசாங்கத்தை உருவாக்க பயன்படுத்தப்படக்கூடாது. மாறாக, அந்தத் தகவல் மக்களுக்கு  முறையான தகவல் முன்னறிவிக்கப்பட்ட, தனிப்பட்ட விருப்பங்களை தேர்வு செய்யவும், அரசு அதன் முடிவுகளுக்கு பொறுப்பேற்க செய்யவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

மக்கள் தனது உடல் நிலையை 24 மணி நேரமும் கண்காணிக்க முடிந்தால், அவர்கள் மற்றவர்களின் உடல்நலத்திற்கு அபாயமானதாக மாறியிருக்கின்றனர் அன்பது மட்டுமின்றி, அதற்க்கு காரணமான பழக்கவழக்கங்களையும் அறிந்துக் கொள்வார்கள். ஒவ்வொரு அரசாங்கமும், கொரோனா வைரஸ் மற்றும் அதன் பரவல் குறித்த நம்பகமான புள்ளிவிவரங்களை மக்கள் வெளிப்படையாக அறியும்படி செய்தால், அரசாங்கம் மக்களிடம் உண்மையைச் சொல்கிறதா, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை மக்களால் தீர்மானிக்க முடியும். ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஒட்டுமொத்தமாக கண்காணிப்பதைப் பற்றி பேசும்போதெல்லாம், அதே கண்காணிப்பு தொழில்நுட்பம் மக்கள் அரசை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் என்பது நமது குடிமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய சோதனையாகும்.  அடுத்து வரும் நாட்களில், மக்கள் ஒவ்வொருவரும், விஞ்ஞானிகள், உடல்நல நிபுணர்கள் வழங்கும் அறிவியல் ரீதியான தகவல்கள் மற்றும் அரசியல்வாதிகள் முன்வைக்கும் ஆதாரமற்ற கோட்பாடுகளை தேர்வு செய்ய வேண்டியிருக்கலாம். இந்நேரத்தில் நாம் சரியானவற்றை தேர்வு செய்யத் தவறினால்,  ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி என்று நம்முடைய சுதந்திரத்தை கைவிட வேண்டியிருக்கலாம்.

மக்களுக்கு வேண்டியது – ஒரு ஒருங்கிணைந்த உலகளாவிய திட்டம்

நாம் எதிர்கொள்ளும் இரண்டாவது முக்கியமான தேர்வு தேசிய அளவிலான தனிமைக்கும், உலகளாவிய ஒற்றுமைக்கும் இடையில் உள்ளது. ஒரு தொற்றுநோய் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி இரண்டும் உலகளாவிய பிரச்சினைகள் ஆகும். உலக நாடுகளுக்குள் உள்ள ஒத்துழைப்பால் மட்டுமே அவற்றை திறம்பட தீர்க்க முடியும்.

முதல் மற்றும் பெரிய அளவிலான ஒரு வைரஸ் பரவலை தோற்கடிக்க  நாம் உலக அளவில் தகவல்களைப் பகிர வேண்டும். இது அந்த வைரஸை கட்டுப்படுத்தி, மனிதர்களின் நன்மைக்கு வழிவகுக்கும். சீனாவிலும், அமெரிக்காவிலும் ஒரு கொரோனா வைரஸ் மனிதர்களை எவ்வாறு பாதிக்கலாம் என்பது போன்ற தகவல்களில் மாற்றமிருக்காது. ஆனால், அதை திறம்பட கையாள்வது பற்றி மதிப்புமிக்க பாடங்களை அமெரிக்காவிற்கு சீனா கற்பிக்க முடியும். ஒரு இத்தாலிய மருத்துவர் அதிகாலையில் மிலனில் கண்டுபிடிக்கும் ஒரு புதிய தகவல், மாலையில் தெஹ்ரானில் பல உயிர்களைக் காப்பாற்றக்கூடும். பல அரசியல் கொள்கைகளுக்கு இடையில் இங்கிலாந்து அரசாங்கம் நடவடிக்கைகளை தொடங்க தயங்கிக் கொண்டிருந்த போது, ​​ஒரு மாதத்திற்கு முன்பு இதேபோன்ற சங்கடத்தை எதிர்கொண்டு, தற்போது மீண்டுள்ள கொரியர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறலாம். ஆனால் இது நடைமுறைப்படுத்த, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை தேவை.

அடுத்த வரும் நாட்களில், மக்கள் ஒவ்வொருவரும் சுயநலமிக்க அரசியல்வாதிகளின் ஆதாரமற்ற கோட்பாடுகளை விட சுகாதார நிபுணர்களின் அறிவியல் உண்மைகளை, அவர்களின் தகவல்களை நம்பி, தேர்வு செய்ய வேண்டும்.

நாடுகள் தகவல்களை வெளிப்படையாகவும், தாழ்மையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்க வேண்டும். அது நம்பத்தகுந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த தகவல்கள் விவர்க்கும் விளைவுகளை மக்கள் நம்ப முடியும். தேவையான மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் உலகளாவிய முயற்சியும் ஒத்துழைப்பும் தேவை. குறிப்பாக பரிசோதனை கருவிகள் மற்றும் சுவாச இயந்திரங்கள். ஒவ்வொரு நாடும் உள்நாட்டில் அதைச் செய்ய முயற்சிப்பதற்கும், சாதனனங்களை பதுக்கி வைப்பதற்கும் பதிலாக, ஒரு ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சி உற்பத்தியை பெரிதும் துரிதப்படுத்தி, உயிர்காக்கும் கருவிகள் மிகவும் நியாயமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யும். ஒரு போரின் போது நாடுகள் முக்கிய தொழில்களை தேசியமயமாக்குவது போலவே, கொரோனா வைரஸுக்கு எதிரான மனிதப் போரும், முக்கியமான சாதன உற்பத்தியை  “மனிதமயமாக்க”லாம். சில கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகக் கொண்ட ஒரு பணக்கார நாடு, பல ஆயிரம் எண்ணிக்கையை கொண்ட ஒரு ஏழை நாட்டிற்கு விலைமதிப்பற்ற உபகரணங்களை அனுப்ப தயாராக இருக்க வேண்டும். ஒரு நாட்டிற்கு உதவி தேவைப்பட்டால், பிற நாடுகள் அதன் உதவிக்கு வரும் என்று மக்கள் இன்றும் நம்புகிறார்கள்.

மருத்துவ மற்றும் மருத்துவ பணியாளர்கள் தேவைப்படும் ஒரு நாடு அதைப்பெறுவதற்கு  இதேபோன்றதொரு உலகளாவிய முயற்சியை முயற்சிக்கலாம். தற்போது குறைவாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், மருத்துவ ஊழியர்களை உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு, உதவி தேவையான நேரத்தில் உதவுவதற்காகவும், மதிப்புமிக்க அனுபவத்தைப் பெறுவதற்காகவும் அனுப்பி வைக்க வேண்டும்.

பொருளாதார ஒத்துழைப்பிலும் உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம். பொருளாதாரம் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் உலகளாவிய தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு அரசாங்கமும் மற்றவர்களை முற்றிலும் புறக்கணித்து தனது சொந்த காரியத்தைச் செய்தால், இதன் விளைவாக குழப்பம் மற்றும் தீவிரமான நெருக்கடி ஏற்படும். எனவே, அனைவரின் தற்போதைய தேவை ஒரு விரைவான, உலகளாவிய செயல் திட்டம் ஆகும்.

இதனோடு, நாடுகளுக்கிடையே பயணம் என்ற அம்சத்திலும் ஒரு உலகளாவிய உடன்பாட்டை எட்டுவது மற்றொரு அவசியத் தேவையாகும். அனைத்து சர்வதேச பயணங்களையும் பல மாதங்களுக்கு இடைநிறுத்துவது என்பது பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தும். மேலும் அது கொரோனா வைரஸுக்கு எதிரான போரைத் தடுக்கும். விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், வணிகர்கள் போன்ற  அத்தியாவசிய பயணிகளை, அவர்களது சொந்த நாட்டிலேயே, உரிய பரிசோதனைகளுக்கு பின் தன் எல்லையை தாண்ட அனுமதிக்க வேண்டும். இதை ஒரு உலகளாவிய உடன்பாட்டின் மூலம் எட்ட முடியும். ஒரு விமானத்தின் அனைத்து பயணிகளும் முறையாக பரிசோதிக்கப்பட்டே விமானத்தினுள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிந்தால், எந்நாட்டினரும் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய நாடுகளில் இதுபோன்றதொரு எந்த விஷயங்களையும் செய்யவில்லை. ஒரு ஒன்றிணைந்த மூடல் ஒரு சர்வதேச சமுதாயத்தை முடக்கியுள்ளது. தற்போதுதான் விவரமறிந்த எவரும் இவ்வுலகில் இல்லை எனத் தெரியவருகிறது. சென்ற வாரம் ஒரு உலகத் தலைவர்களின் அவசரக் கூட்டமும், அதில் ஒரு ஒருங்கிணைந்த பொதுவான செயல் திட்டமும் கொண்டுவர எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜி7 தலைவர்கள் இந்த வாரம் தான் வீடியோ கான்ஃபெரன்ஸில் பேசியுள்ளனர். ஆயினும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

முந்தைய 2008 பொருளாதார நெருக்கடி மற்றும் 2014  எபோலா வைரஸ் பரவலின் போதும், அமெரிக்கா தன்னை ஒரு தலைவராக முன்னிறுத்திக் கொண்டு பல செயல் திட்டங்களை முன்னெடுத்தது. ஆனால் தற்போதைய அமெரிக்க அரசு தலைவர் பதவியை இராஜினாமா செய்துவிட்டது போலத்தெரிகிறது. இதிலிருந்து தற்போதைய தலைவர்கள் ஒட்டுமொத்த மனிதக் குளத்தின் நன்மையை விட தன்னலத்தையே பெரிதும் விரும்பிகிறார்கள் என தெளிவாகிறது.

இதன நிர்வாகம் அதன் நெருங்கிய கூட்டாளிகளைக் கூட கைவிட்டுவிட்டது. இது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அனைத்து பயணங்களையும் தடைசெய்தபோது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன்கூட்டிய அறிவிப்பைக் கொடுப்பதைப் பற்றி அது கவலைப்படவில்லை – அந்த கடுமையான நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்தாலோசிக்கவும் செய்யவில்லை. மேலும், அது, ஒரு புதிய கோவிட் -19 தடுப்பூசிக்கு ஏகபோக உரிமைகளை வாங்க ஒரு ஜெர்மன் மருந்து நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர் வழங்கியதாகக் கூறி ஜெர்மனியை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது. தற்போதைய நிர்வாகம் கடைசியில் மாற்றத்தை ஏற்படுத்தி, உலகளாவிய செயல் திட்டத்தை கொண்டு வந்தாலும், ஒரு சிலர் இன்னும் ஒருபோதும் பொறுப்பேற்காத, ஒருபோதும் தவறுகளை ஒப்புக் கொள்ளாத, மற்றும் எல்லா குற்றச்சாட்டுகளையும் மற்றவர்களிடம் விட்டுவிட்டு, அனைத்து பெருமைகளையும் வழக்கமாக தானே எடுத்துக் கொள்ளும் ஒரு தலைவரையே பின்பற்றுவார்கள்.

அமெரிக்கா விட்டுச்சென்ற வெற்றிடத்தை மற்ற நாடுகள் நிரப்பவில்லை என்றால், தற்போதைய தொற்றுநோயைத் தடுப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பது மட்டுமல்லாமல், அதன் தாகம் சர்வதேச அளவில், நம் உறவுகளுக்கு பல ஆண்டுகளுக்கு விஷமாகத் தொடர்ந்துக் கொண்டிருக்கும். இன்னும் ஏற்படவிருக்கும் ஒவ்வொரு நெருக்கடியும் காரணமாக இருக்கும். உலகளாவிய ஒற்றுமையின்மையால் ஏற்படும் கடுமையான ஆபத்தை உணர தற்போதைய தொற்றுநோய் மனிதகுலத்திற்கு உதவும் என்று நாம் நம்புவோம்.

மனிதகுலம் தன் தேர்வைத் தீர்மானிக்க வேண்டும். நாம் ஒற்றுமையின்மையின் பாதையில் பயணிப்போமா, அல்லது உலகளாவிய ஒற்றுமையின் பாதையை ஏற்றுக்கொள்வோமா? நாம் ஒற்றுமையின்மைத் தேர்வுசெய்தால், இது நெருக்கடியை நீடிக்கச் செய்வது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இன்னும் மோசமான பேரழிவுகளுக்கும் வழிவகுக்கும். உலகளாவிய ஒற்றுமையை நாம் தேர்வுசெய்தால், அது கொரோனா வைரஸுக்கு எதிராக மட்டுமல்ல, 21 ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்தை பாதிக்கக்கூடிய அனைத்து எதிர்கால தொற்றுநோய்களுக்கும், நெருக்கடிகளுக்கும் எதிரான வெற்றியாக இருக்கும்.

 

ஆசிரியர்: யுவல் நோவா ஹராரி –  “சேபியன்ஸ்”, “ஹோமோ டியூஸ்” மற்றும் “21 ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள் எழுதியவர்.

தமிழில்: லயா