டில்லி

கொரோனா அச்சுறுத்தலால் குளிர்காலப் பயிர்களை அறுவடை செய்ய ஆட்கள் இல்லாத நிலை  ஏற்பட்டுள்ளது.

நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.   இதனால் பலரும் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   வெளி மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர்.   இதனால் பல முக்கியமான பணிகளும் நின்றுள்ளன.  அவற்றில் குளிர்காலப் பயிர்கள் அறுவடையும் அடங்கும்.

ராபி பயிர் என அழைக்கப்படும் குளிர்காலப் பயிர்களாக, கோதுமை, கடுகு, குறுவை நெல், சோளம், பயிறு உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.   அவற்றுக்கு தற்போது அறுவடைக் காலம் ஆகி உள்ளது.   குறிப்பாக இந்த பயிர்கள் அரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் பயிரிடப்படுகின்றன.   இங்கு உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

தற்போது அறுவடை பணிகளை மட்டும் இயந்திரம் மூலம் முடிக்க முடியும்.   ஆனால் இந்த அறுவடைக் காலத்தில் பஞ்சாபில் மட்டும் எடை போட,, சுமை ஏற்ற, சுத்தம் செய்ய, மூட்டை ஆக்க எனப் பல பணிகளுக்கு சுமார் 3.5 லட்சம் விவசாயக்கூலிகள் தேவை உள்ளன.  இத்தகைய பணிகளுக்கு ஆட்கள் யாரும் கிடைக்காததால் அறுவடை நடத்துவதில் எவ்வித பயனும் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வட மாநிலங்களில் இந்த பயிர்களைக் கொள்முதல் அரசு கொள்முதல் நிலையங்கள் தேசிய ஊரடங்கு முன்னிட்டு வரும் ஏப்ரல் 15 வரை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளன.  இந்த அறுவடை தாமதம் காணமாக அரியானா மாநில விவசாயிகள் கொள்முதலை ஏப்ரல் மாத இறுதிக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பஞ்சாப் மாநில மூத்த வேளாண் அதிகாரி தற்போது மாநில அரசு சுகாதார பிரச்சினைகளைக் கவனித்து வருவதால் இந்த மாத இறுதி வரை வேளாண் பிரச்சினைகள் குறித்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என தெரிவித்துள்ளார்.  மேலும் அரசுக்கு தற்போது நிவாரண நிதிக்காக நிறையப் பணம் தேவைப்படுவதால் வேளான் பொருட்கள் கொள்முதலுக்கு நிதி இருக்காது எனவும் கூறி உள்ளார்.

இது குறித்து உணவுப் பொருள் கழக செயலாளர் ரவி காந்த், “அரியானா மாநில விவசாயிகளின் வேண்டுகோள் குறித்து இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.  மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏப்ரல்1 முதல் கோதுமை  கொள்முதல் செய்ய அரசு உத்தேசித்திருந்தது.  ஆயினும் ஆட்கள் பற்றாக்குறையால் அது தள்ளி வைக்கப்பட உள்ளது.  மேலும் இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் இந்த பணிகள் மேலும் பாதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.