இந்திய தலைநகரில் குழந்தைகளை இக்கட்டில் தள்ளும் கொரோனா சூழல்!

புதுடெல்லி: தற்போதைய கோவிட்-19 ஊரடங்கு சூழல், குழந்தை உரிமை தொடர்பான பல முக்கிய சிக்கல்களை, தலைநகர் டெல்லியில் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை தொழிலாளர், வீடின்மை, குழந்தை ஆரோக்கியம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பின்னடைவு, பள்ளிகளிலிருந்து நிற்றல் போன்ற பெரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. இவை அனைத்தும் ஒரேநேரத்தில் திரண்டு சிக்கலை ஏற்படுத்துவதாய் கூறுகிறார் குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான டெல்லி கமிஷன் சேர்மன் அனுராக் குந்து.

அவர் கூறியுள்ளதாவது, “இது எனது கருத்து மட்டுமல்ல; சர்வதேச தொழிலாளர் அமைப்பும் இதுகுறித்த தனது கவலையை வெளியிட்டுள்ளது. பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டதன் காரணமாக, பல குழந்தைகள், பள்ளிகளிலிருந்து இடைநின்று குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இது டெல்லியில் மட்டுமல்ல; நாட்டின் இதர பெருநகரங்களிலும்தான்.

கடந்த 30 ஆண்டுகளாக டெல்லியில் வசித்துவரும் நான், இதுவரை எந்த வீடற்ற குடும்பத்தையும் கண்டதில்லை. ஆனால், இப்போது காண்கிறேன். மேலும், சுகாதார துறையின் கவனம் முழுவதையும் கொரோனாவை நோக்கி திருப்பி விட்டுள்ளதால், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவனிப்பு பின்தள்ளப்படுகிறது” என்று கவலை தெரிவித்துள்ளார் அவர்.