மும்பை

பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கையில் முத்திரையுடன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் பலர் தனிமைபடுத்த பட்டுள்ளனர்.    அவர்களை அடையாளம் காண அம்மாநில அரசு நேற்று முதல் இடது கையில் ஒரு முத்திரையைப் பதித்து வருகிறது.   இந்த முத்திரை தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பயன்படுத்தப் படும் மையைக் கொண்டு இடப்படுகிறது.

நேற்று இரவு பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் தனது கையில் முத்திரையிட்டு தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.   கொரோனா விழிப்புணர்வுக்காக இவ்வாறு செய்துள்ள அமிதாப் வரும் 30 ஆம் தேதி வரை தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.   இது குறித்து அவர் தனது முத்திரை இடப்பட்ட கையின் புகைப்படத்தை டிவிட்டரில் பதிந்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “மும்பை மக்களே, பத்திரமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.  ஏதேனும் அறிகுறி தென்பட்டால் தனிமைப் படுத்திக்கொள்ளுங்கள்” என அறிவுரை அளித்துள்ளார்.  அத்துடன் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வை அவர் ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார்.  இந்த பதிவின் மூலம் ஹோம் குவாரண்டைன் எனப்படும் விட்டில் தனிமைப்படுத்துதல் பிரபலமாகி வருகிறது.