எதிர்காலத்தில் COVID-19 பருவகால தொற்றாக மாறும் வாய்ப்புகள் உள்ளன: விஞ்ஞானிகள்

ஜர்னல் ஃபிரான்டியர் ஆஃப் பப்ளிக் ஹெல்த்  என்ற இதழில் வெளியிடப்பட்ட இதுவரையிலான தொகுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நோயெதிர்ப்பு சக்தி பெற்று, இறுதியில் அது கூட்டு எதிர்ப்பு சக்தியாக மாறும் போது, வைரஸின் பரவல் திறம்பட குறைந்து பருவகால ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகும் பருவகால தொற்றாகலாம்.

சமூகத்தில் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி அடைந்தவுடன், தனித்துவ கொரோனா வைரஸ் அதற்கேற்றவாறு மிதமான பருவநிலை கொண்ட நாடுகளில் பருவகால வைரஸாக மாறக்கூடும். ஆனால், அதுவரை, கோவிட் -19 தொடர்ந்து எல்லா பருவகாலத்திலும் தொடர்ந்து பரவச் செய்யும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. “COVID-19 இங்கே நிரந்தரமாவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. மேலும் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி அடையும் வரை ஆண்டு முழுவதும் வெவ்வேறு பருவநிலையிலும் பெருந்தொற்றை ஏற்படுத்தலாம்” என்று லெபனானில் உள்ள அமெரிக்க பெய்ரூட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வின் மூத்த ஆய்வாளர் ஹசன் சராகெட் எச்சரித்தார்.

“எனவே, பொதுமக்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும், மேலும் முகக்கவசம்  அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுவது மற்றும் கூட்டங்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட சிறந்த தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்” என்று சராகெட் மேலும் கூறினார். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி அடைவதற்கு முன்பு COVID-19 தொற்று பல சுற்றுகள் ஏற்படலாம். முந்தைய ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, தனித்துவ கொரோனா வைரஸ் போன்ற பிற சுவாசப் பாதை வைரஸ்கள் – SARS-CoV-2 – பருவகாலம் சார்ந்த தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக மிதமான பருவகாலம் கொண்ட  பகுதிகளில். இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பொதுவான சளி உண்டாக்கும் பல வகையான கொரோனா வைரஸ்கள் மிதமான பகுதிகளில் குளிர்காலத்தில் உச்சபட்ச அளவில் தொற்றை ஏற்படுத்துவதாக அறியப்படுகின்றன. ஆனால் வெப்பமண்டல பகுதிகளில் ஆண்டு முழுவதும் பரவுகின்றன.

இந்த ஆய்வில், விஞ்ஞானிகள் பருவகால வைரஸ்களை மதிப்பாய்வு செய்தனர். அவற்றில், பருவநிலையைப பொறுத்து தொற்றை ஏற்படுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் வைரஸ் மற்றும் ஹோஸ்ட் காரணிகளையும், SARS-CoV-2 இன் நிலைத்தன்மை மற்றும் தொற்று குறித்த சமீபத்திய அறிவையும் ஆய்வு செய்தனர். காற்றிலும், மேற்ப்பரப்புகளிலும் வைரஸ் உயிர்வாழ்வது, தொற்றுநோய்களுக்கு மக்கள் எளிதில் பாதிக்கப்படுவது மற்றும் வீட்டினுள் இருக்கும் கூட்டம் போன்ற மனித நடத்தைகள், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம், அதன் மாற்றங்கள் காரணமாக பருவங்களில் வேறுபடுகின்றன என்று அவர்கள் விளக்கினர். இந்த காரணிகள் ஆண்டின் வெவ்வேறு நேரங்களில் சுவாச வைரஸ்கள் பரவுவதைப் பாதிக்கின்றன என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், காய்ச்சல் போன்ற பிற சுவாச வைரஸ்களுடன் ஒப்பிடுகையில், விஞ்ஞானிகள் COVID-19 அதிக அளவில் பரவும் வீதத்தைக் கொண்டிருப்பதாகக் கூறினர் – அதிலும் குறைவான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களிடையே இது அதிகமாக பரவுகிறது.

எனவே காய்ச்சல் மற்றும் பிற சுவாச வைரஸ்களைப் போலல்லாமல், வைரஸ்களின் பருவநிலையை நிர்வகிக்கும் காரணிகளால் கோடை மாதங்களில் COVID-19 பரவுவதைத் தடுக்க முடியாது என்று அவர்கள் கூறினர். இருப்பினும், இயற்கையான நோய்த்தொற்றுகள் மற்றும் தடுப்பு மருந்துகள் மூலம் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி அடைந்தவுடன், COVID-19 இன் பரவுதல் விகிதம் கணிசமாகக் குறைய வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள், இதனால் வைரஸ் பருவகால காரணிகளால் பாதிக்கப்படக்கூடும். இன்ஃப்ளூயன்ஸா போன்ற அதே சுழற்சி முறையைப் பின்பற்றும் என்எல் 63 மற்றும் எச்கேயு 1 போன்ற மிக சமீபத்தில் பரவ ஆரம்பித்த  பிற கொரோனா வைரஸ்களுக்கும் இதுபோன்ற பருவநிலையில் பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். “இது ஒரு தனித்துவ வைரஸாகவே உள்ளது, மேலும் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்து வரும் இந்த நிலையிலும் இன்னும் அறியப்படாத விஷயங்கள் உள்ளன” என்று சராகெட் கூறினார்.

“எங்கள் கணிப்புகள் உண்மையா இல்லையா என்பது எதிர்காலத்தில் அறியலாம். ஆனால் இதுவரை நாம் அறிந்ததைப் பொறுத்தவரை, COVID-19 மற்ற கொரோனா வைரஸ்களைப் போலவே பருவகாலத் தொற்றாக மாறும்” என்று அவர் மேலும் கூறினார். வெப்பமான கோடைகாலத்தைப் பொருட்படுத்தாமல் வளைகுடா நாடுகளில்  உலகளாவிய தனிநபர் COVID-19 நோய்த்தொற்று விகிதம் பதிவாகியுள்ளது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர். “மூடியுள்ள இடங்களில் விரைவான வைரஸ் பரவுவதற்கு இது முக்கியமாக காரணம் என்றாலும், கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி அடையும் வரை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அவசியத்தை இது உறுதிப்படுத்துகிறது” என்று யாசின் கூறினார்.