Random image

இட்லி, வடை, சாம்பாருக்கு வேட்டு வைத்துள்ள கொரோனா…

கொரோனாவின் தாக்கம் தமிழக மக்களின் பாரம்பரிய உணவான இட்லி, தோசை, வடை, சாம்பாருக்கு வேட்டு வைத்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பருப்பு வகைகள் பற்றாக்குறை அதிகரித்து வரும் விலை உயர்வு, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

21 நாட்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக, நாடு முழுவதும் அனைத்து வகையான தொழில்நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில், விவசாயமும், விவசாயிகளும் கடுமையான இழப்பை சந்தித்து வருவதை நாம் அனைவரும் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு தொழில்நிறுவனங் களில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், கொரோனா லாக்டவுன் காரணமாக, தங்கள் சொந்த ஊர்களை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுத்து பயணமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

இந்த இக்கட்டான ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு சார்பில், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற இலவச உணவுப்பொருட்கள் ஒருபக்கம் வழங்கப்படுவதாலும், நடுத்தர மற்றும் உயர்வகுப்பு மக்கள் தங்கள் தேவைக்கு அதிகமாகவே உணவுப்பொருட்களை வாங்கி ஸ்டாக் வைத்துக்கொண்டது மற்றும் ஒருசில வியாபாரிகளால், லாப நோக்கத்துடன் உணவுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா லும், தற்போது, உணவின் அத்தியாவசியத் தேவையான பருப்பு வகைகளுக்கு தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் பருப்பு வகைகளின் விளைச்சல் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் தான் அதிகம். அங்குள்ள மானாவாரி நிலங்களில்தான் பருப்பு வகைகள் பயிரிடப் படுகின்றன.

அதேபோல சாகுபடி பரப்பளவிலும், மகசூலிலும் மற்ற உணவுப் பயிர்கள் உயர்ந்த அளவுக்கு பருப்பு வகைகள் உயரவில்லை. அன்று முதல் இன்று வரை சுமார் 250 லட்சம் ஹெக்டேர்களில் மட்டுமே பருப்பு வகைகள் பயிரிடப்படுகிறது.

இதற்கிடையில், நமது நாட்டு ஏற்றுமதியாளர்கள் பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.

இருந்தாலும் தற்போதைய சூழலில், விளைந்த பருப்புகளை சுத்தப்படுத்தி இயந்திரங்கள் மூலம் சரி செய்து, பாக்கெட்டுகளில், மூட்டைகளில் அடைத்து விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.

அதற்கு முக்கிய காரணம்,  தேவையான தொழிலாளர்கள் இல்லாத அவலம்… அனைத்து தொழிலா ளர்களும் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து சென்றுவிட்டதால், பல தொழில்நிறுவனங் களில் வேலை செய்ய ஆள்இல்லை.

இந்தியாவை பொருத்த வரையில்  பசுமை புரட்சி தொடங்கிய பிறகு,  பருப்பு வகைகள்  தவிர மற்ற உணவு வகைகளான காய்கறி, கிழங்கு, நெல், கோதுமை போன்றவற்றின் உற்பத்தியில் நம்மால் தன்னிறைவு பெற முடிந்தது.  ஆனால் பருப்பு வரைகள் உற்பத்தியில் இன்னும் தன்னிறைவு பெற முடியவில்லை.  இதனால் பல சமயங்களில் வெளிநாட்டு பருப்புகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

50களில் சராசரியாக தனி நபருக்கு கிடைத்த பருப்பின் அளவு 60 கிராமாக இருந்தது. தற்போது வீடுகளில் அது 30 கிராமாக குறைந்து விட்டது. சத்துணவு கூடங்களில் 10கிராம் அளவுக்கு குறைந்துள்ளது

ஒரு தனிநபருக்கு ஒரு நாளைக்கு 65 கிராம் பருப்பு வகைகள் கிடைத்தால்தான் அவருக்கு உரிய புரதசத்து கிடைக்கும். ஆனால், நமது நாட்டின் பருப்பு உற்பத்தி,  மக்கள் தொகை அடிப்படையில் மேற்சொன்னபடி30 கிராம் அளவிலேயே  உள்ளது.   இத்தனைக்கும் உலகளவில் பருப்பு உற்பத்தியில் நமது நாடு முன்னிலை பெற்றிருக்கிறது.   எனினும் தன்னிறைவு அடையாததற்கு காரணமாக அமைந்திருப்பது மக்கள் தொகை பெருக்கம்.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சாகுபடி பரப்பு அதிகரித்திருந்தால் நமது நாடு தன்னிறைவு அடைந்திருக்கும்.  சாகுபடி பரப்பு அதிகரிக்காமல் போனதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டாததும் ஒரு முக்கிய காரணம்.

இதுபோன்ற ஒரு சூழலில்தான், தற்போது கொரோனா வைரஸின் பேயாட்டம் இந்தியாவில் தீவிரமடைந்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக வட மாநிலங்களில் இருந்து,  தமிழகத்திற்கு வழக்கமாக வரும் பருப்பு வகைகள் வருவது நிறுத்தப்பட்டு உள்ளது.

உணவுக்கு முக்கியத்தேவையான துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு, பட்டாணி போன்றவை வரத்து முற்றிலுமாக நின்றுபோனது.

கடந்த மாதம் வடமாநிலங்களில்  சாகுபடி செய்யப்பட்ட, பருப்பு வகைகள் அறுவடை முடிந்த நிலையில், கொரோனா பரவல் பீதி காரணமாக, அதை சுத்தப்படுத்தி விற்பனைப்படுத்த போதிய தொழிலாளர்கள் கிடைக்காதது ஒருபுறமும், அதை விற்பனைக்கு கொண்டு சேர்ப்பதில் ஏற்படும் இடையூறும் மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பருப்பு வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

வடமாநிலங்களில் உள்ள 75 சதவிகித பருப்பு மண்டிகள் செயல்படாததால், தமிழகத்திற்கு வரவேண்டிய பருப்பு வகைகள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், சுமார் 25 சதவிகிதம் மட்டுமே கிடைப்பதால், அதன்விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது என்று தமிழ்நாடு பருப்பு வர்த்தகர்கள்  கூறி உள்ளனர்.

அதேவேளையில் சில வர்த்தகர்கள் லாபநோக்கில் பருப்புகளை பதுக்கி வைத்து, அதிக லாபம் பெற, திட்டமிட்டே இந்த விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தியர்களின் உணவு வகைகளில் முக்கிய பங்களிப்பது பருப்பு வகைகள். குறிப்பாக தமிழகம் உள்பட தென்னிந்திய உணவு உணவுப்பொருட்களில் பருப்பு அத்தியாவசியமானது. தற்போது அதன்விலை 50சதவிகிதம் வரை அதிகரித்து உள்ளது.

பெரும்பாலான தென்னிந்தியர்களின் காலை மற்றும் இரவு உணவு இட்லிதான் என்பது அனைவருக்கும் தெரியும்.  சமீப ஆண்டுகளாக சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், இன்றைய காலக்கட்டத்தில் இட்லி தவிர்க்க முடியாத உணவாக மாறி உள்ளது.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பருப்பு பற்றாக்குறை, தமிழக சமையறைகளில் இருந்து அன்றாட உணவுக்கு வேட்டு வைத்துவிடுமோ என்று அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் ஊரடங்கு விலக்கப்பட்டாலும், கொரோனா தடுப்பு காரணமாக மேலும் சில நாட்கள் மக்கள் தனித்திருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றிய இடங்களுக்கு திரும்புவது எப்போது என்பது குறித்த வேள்வி எழுந்துள்ளது.

அவர்கள் மீண்டும் தங்களது பணிகளை தொடங்கி, அதன்பிறகு, உணவு உற்பத்தி உள்பட அனைத்து வகையான சேவைகளும் இயல்புநிலைக்கு வர மேலும் சில வாரங்கள் ஆகலாம்.

அதுவரை மக்களுக்கு தமிழக  மக்களுக்கு தேவையான பருப்புகளுக்கு என்ன செய்வது…

பருப்பு இல்லாமலே உணவுகளை சமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயமும் மக்களிடையே எழுந்துள்ளது.

உள்நாட்டு பற்றாக்குறையை ஈடு செய்யவும், விலை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு  உடனே வெளிநாட்டில் இருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வழங்க வேண்டும் என வணிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இல்லையேல், அனைத்து தரப்பினரும் சுவைக்கும், சுலபமாக செரிமானம் அடையும் உணவான இட்லி, தோசை போன்றவைகள் பொதுமக்கள் மறக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடும்.