கோரோனாவால் இப்படியும் நன்மை.. ஓசூரை வாழவைக்கும் திருச்சி..

மிழகத்தில் செயற்கை கற்கள் (GEM) தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஊர் திருச்சி மாநகரம். தொழிலுக்கு தேவையான மிஷின்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களை பெரும்பாலும் சீனாவிலிருந்தே இறக்குமதியாகும்.

இப்போது வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. சீனாவில் இருந்து பொருட்கள் வர தடை செய்யப்பட்டுள்ளதால் தவித்துப் போனார்கள் திருச்சி செயற்கைக்கோள் உற்பத்தியாளர்கள்.

உற்பத்தியும் வியாபாரமும் முடங்கிப் போய்விடும் என்ற அபாய கட்டம் ஏற்படவே கடைசியில் உள்ளூர் தயாரிப்புக்களை நாட தொடங்கியுள்ளனர். தங்களுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களை வாங்க ஓசூரிலுள்ள தொழிலகங்களை நாடி வருகின்றனர். இவற்றின் விலையும் சீன மெஷின்களின் விலையை விட குறைவானதாகவே உள்ளது. சீன மெஷின்கள் ரூ. 25 லட்சத்திலிருந்து ரூ. 30 லட்சங்கள் வரை விற்கப்படும் நிலையில் உள்ளூர் தயாரிப்புகள் ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சத்திற்குள்ளேயே விற்கப்படுகிறது.

இதுபற்றி TIDITSSIA-வின் தலைவர் இளங்கோ அவர்கள் கூறுகையில், “தற்போது நாங்கள் உள்ளூர் தயாரிப்புக்களின் தரம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அவை சீன தயாரிப்புகளின் தரத்தில் இருந்தால் இனி இந்த இயந்திரங்களை இங்கேயே வாங்க முடிவு செய்துள்ளோம்” என்கிறார்.

மேலும் விலை குறைவும் ஓர் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இறக்குமதிக்காக இவ்வளவு அதிக தொகை செலவு செய்யப்படுவது தவிர்க்கப்படும். இதற்கென 18% ஜெஎஸ்டியும் செலுத்தப்படவேண்டியுள்ளது. உள்ளூர் தயாரிப்புகள் நல்ல தரத்தில் கிடைக்கும் பட்சத்தில் இந்த சீனர்களின் ஏகபோக ஆதிக்கம் ஒழிக்கப்படும் என்கின்றனர் உள்ளூர் செயற்கை கல் உற்பத்தியாளர்கள்.

இந்த கொரோனா வைரஸ் இன்னும் என்னென்ன மாற்றங்களையெல்லாம் கொண்டுவரப்போகிறதோ தெரியவில்லை.

-லட்சுமி பிரியா