மைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதற்கான தடுப்பூசி மற்றும் சிகிச்சைக்கான மருந்துகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படாத நிலை உள்ளது.  கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி  பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் ஒரு பிரபல இனிப்புக் கடை அமைந்துள்ளது.   அந்த இனிப்புக்கடையில் அவர்கள் தயாரிக்கும் மூலிகை மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடையலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.   இந்த விளம்பரம் கோவை பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விளம்பரத்தால் இக்கடை மூலிகை மைசூர்பா வாங்க மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி உள்ளது.  அத்துடன் இந்த கடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் கொரோனா அறிகுறிகள் உள்ளோருக்கு இலவசமாக மைசூர்பா அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் மத்திய அரசிடம் இந்த மைசூர்பாவில் உள்ள மூலிகைகள் விவரங்கள் அளிக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார சேவை இயக்குநர் ரமேஷ் குமார், “ஒரு இனிப்பின் மூலம் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பது மக்களிடையே தவறான கருத்துக்களை அளிப்பதாகும்.   இது கொள்ளை நோய் விதி 1897ஐ மீறும் செயலாகும்.   மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை அரசு உருவாக்கும் போது இந்த விளம்பரம் அதைக் கெடுக்க வாய்ப்புள்ளது என்பதால் இது குறித்து விசாரிக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி