சபரிமலை கோயிலில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு: பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் நவம்பர் 16ம் தேதி முதல் இன்று வரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

மண்டல பூஜைக்காக அய்யப்பன் கோயில் நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் பக்தர்கள் வர வேண்டும். மேலும், சான்றிதழ் இல்லாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக ரான்னியில் உள்ள கொரோனா முதல் நிலை சிகிச்சை மையத்தில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் பணி செய்து வந்த தேவஸ்தான ஊழியர் ஒருவருக்கு நேற்று கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் ரான்னியில் உள்ள கொரோனா முதல் நிலை சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையடுத்து, சன்னிதானத்தில் பணியாற்றும் மற்ற சிலருக்கு பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் சபரிமலையில், சன்னிதானத்திற்கு வெளிப்பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு உடைகளை வழங்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.