பாகிஸ்தானில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை!

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துவிட்டதாகவும், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக, 4,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து, 3,671 என்பதாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,067 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம், 34 ஆயிரத்து 355 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 7 லட்சத்து 5,833 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவருமான ஷாஹித் கக்கான் அப்பாசிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.