புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.ஜெயபாலுக்கு கொரோனா உறுதியானது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை 2,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 1,483 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 35 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மீதமுள்ள 997 பேர் ஜிப்மர் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சூழலில் கடந்த 20-ம் தேதி முதல் புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் தொடர்ந்து 3 நாள்கள் கலந்துகொண்ட கதிர்காமம் தொகுதியின் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான என்.எஸ்.ஜே.ஜெயபாலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் புதுச்சேரியில் ஒரு எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இலேசான கொரோனா அறிகுறிகளுடன் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான பாலனுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

முதல்நாள் சட்டப்பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ-க்களுடன் வந்த பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முகக்கவசம் அணியாமல் பேரவை நிகழ்வில் பங்கேற்றார். அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் முகக்கவசம் கொடுத்தபோதும் அதனை வாங்கி சட்டப்பையில் வைத்துக்கொண்டாரே தவிர முகத்தில் அணியவில்லை.

தற்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள், பேரவையில் நேற்று ஆளுநர் உரை நிகழ்த்திய கிரண் பேடி, செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் என அனைவரும் கலக்கத்தில் இருக்கின்றனர்.