கொரோனாவால் வாழ்க்கையின் ஓட்டத்தை நிறுத்தி விட முடியாது : உச்சநீதிமன்றம் 

டில்லி

கொரோனாவால் வாழ்க்கையின் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி விட முடியாது என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது..

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்துக்குள் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வான ஜே இ இ மற்றும் மருத்துவ பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட் ஆகியவை நடைபெறுவது வழக்கம்,  இந்த ஆண்டுக்கான தேர்வுகள் கொரோனா அச்சம் காரணமாக தொடர்ந்து  தள்ளி வைக்கப்பட்டு வந்தது.

இறுதியாக வரும் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரை ஜே இ இ தேர்வும் செப்டம்பர் 13 ஆம் தேதி அன்று நீட் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  இந்த தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரி 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனுவைத் தாக்கல் செய்தனர்.இந்த மனு அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் கீழ் நடந்தது.

இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த தேர்வுகள் நடக்கும்போது போதுமான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.   இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “தேர்வு நடத்தும் முடிவில் தலையிடுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடும்.  எனவே இந்த மனுவை அமர்வு தள்ளுபடி செய்கிறது.  மேலும் கொரோனாவால் வாழ்க்கையின் ஓட்டத்தை நிறுத்தி விட முடியாது” என அறிவித்துள்ளனர்.