கொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 90.62% ஆக உயர்வு : சுகாதார செயலர்

டில்லி

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 90.62% ஆக உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் சுமார் 79.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இதுவரிஅ 1.2 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதில் ஆறுதல் ஊட்டும் விதமாக சுமார் 72 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.  இந்திய கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “தற்போது கேரளா, மே. வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இப்போது பண்டிகை காலம் என்பதால் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது

சென்ற 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்தவர்களில் 49.4% பேர் கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.   ஆனால் நாடு முழுவதும் கடந்த 5 வாரங்களாக நாள்தோறும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் விகிதம் குறைந்துள்ளது.  மேலும் நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோரின் விகிதம் 90.62 சதவீதமாக அதிகரித்துள்ளது” எனக் கூறினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, “நாட்டில் 3 தடுப்பூசிகள் வெவ்வேறு பரிசோதனை கட்டங்களில் உள்ளது. இதில் கோவேக்சின் தடுப்பூசிக்கு 3-ம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.  மேலு சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி 2-ம் கட்ட பரிசோதனை முடிந்த நிலையில் பிரேசில், தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவில் சோதனையில் உள்ளது ” என தெரிவித்துள்ளது.