சென்னை:

சென்னை தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சித்த மருந்து வகைகள் மூலம் 5 நாட்களில்  கொரோனா நோய் குணப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  தமிழக அரசு இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சென்னை அண்ணா அரசு சித்த மருத்துவமனை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை ஆகியவை இணைந்து உருவாக்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படியே நோயாளிகளுக்கு தாம்பரம் சித்த மருத்துவமனை நிர்வாகம்  சிகிச்சை வழங்கி வருகிறது.

புழல் சிறை கைதிகளுக்கு தாம்பரம் சித்த மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 நாளில் சிகிச்சை 90 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர்  தொடர்ந்து 5 நாட்களுக்கு ஒருவேளை வழங்கப்படும். பின்னர் வாரம் இருமுறை அல்லது ஒருமுறை என அளவு குறைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி,  சிறப்பு மூலிகைத் தேநீரும் வழங்கப்படுகிறது. அதாவது, தேநீரில் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரட்டை, அதிமதுரம், மஞ்சள், ஓமம், கிராம்பு, கடுக்காய் ஆகியவற்றைக் குறிப்பிட்ட அளவில் கலந்து பொடியாக்கி, 400 மி.லி. தண்ணீரில் 10 கி. இந்தப் பொடியை கலந்து அந்த தண்ணீரை 100 மி.லி. அளவாக வற்ற வைத்து  தினந்தோறும் இருமுறை வழங்கப்படுகிறது. இதுதவிர, தாளிசாதி மாத்திரை காலை, இரவு என இருவேளைகள் வழங்கப்படுகின்றன.

இந்த மருந்துகளால் நோயாளிகள் விரைவாக குணமடைந்து வருகின்றனர். இதையொட்டி, தாம்பரத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.