கொரோனா: இது முதியவர்களுக்கு உயிர்கொல்லி

--

தி லான்செட் இன்ஃபெக்சியஸ் டிஸ்ஸீஸ் (The Lancet Infectious Diseases) என்ற இதழில் கடந்த திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, COVID-19 இறப்பு விகிதம் நிபுணர்கள் தெரிவித்த அளவுக்கு மோசமாக இல்லை. ஆனால் இந்த தொற்று 2009-ன்  எச் 1 என் 1 காய்ச்சல் தொற்றுநோயை விட மிகவும் ஆபத்தானது, மேலும் வயதுக்கு ஏற்ப, ஆபத்தின் கடுமை உயர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த விகிதம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது. ஏனெனில், ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் போன்றவற்றில் வேறுபடுகின்றன. இந்த புதிய ஆய்வில், உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளிகளில். இறப்பு விகிதம் 1.38% என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மதிப்பிடப்படாத உறுதிப்படுத்தப்படாத சந்தேகத்திற்கு உரியவர்களையும் சேர்த்து கணக்கிடும்போது, ஒட்டுமொத்த இறப்பு விகிதம் .66% என கணக்கிடப்படுகிறது.

லண்டனின் இம்பீரியல் கல்லூரி மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் சீனாவின் பிரதான நிலப்பரப்பில், ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட மொத்த எண்ணிக்கையான 70,117 பேர்களின் தரவில் இருந்து, புதிய மதிப்பீடுகளை கணக்கிட்டனர். மேலும் சீனாவின் வுஹானில் இருந்து நாடு திரும்பிய விமானங்களில் 689 புதிய பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்தனர். டிசம்பர் மாதத்தில் நோய் பரவல் தொடங்கியதிலிருந்து, இறப்பு விகிதம் குறித்த பல மதிப்பீடுகள் கணக்கிடப்பட்டு அறிக்கை செய்யப்பட்டுள்ளன. சி.டி.சி, உலக சுகாதார அமைப்பு மற்றும் பிறர் ஒட்டுமொத்தமாக 3.4% வீதங்களையும், சில வயதைப பொருத்து 1% க்கும் குறைவான விகிதங்களையும் தெரிவித்துள்ளனர்.

COVID-19 இறப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் விகிதங்கள்

புதிய ஆய்வு முந்தைய ஆய்வுகளின் முடிவுகளை ஒத்திருக்கின்றன. இறப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கும் விகிதங்கள் வயதுக்கு ஏற்ப வேறுபடுகின்றன, மேலும் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கின்றன. குழந்தைகள் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளில் 9 வயது முதல் 1% க்கும் குறைவான இறப்பு விகிதங்கள் பதிவாகியுள்ளன. 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில், 4.28% ஆகவும், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 7.8% ஆகவும் உயர்ந்துள்ளது. 60 வயதிற்குட்பட்டவர்களில் 11.8% பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு கடுமையான அறிகுறிகள் கொண்டுள்ளனர். 70 வயதில் 16.6% பேரும், 80 வயதிற்குள், 18.4% பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட குறைந்த வாய்ப்புள்ளவர்கள் 10 முதல் 19 வயதுடையவர்கள் (0.04%). 20 வயதிற்குட்பட்டவர்களில் 1% பேரும், 30-39 வயதுடைய 3.4% பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 40-49 வயதில், மருத்துவமனையில் சேர்க்கும் விகிதம் 4.3% ஆக உள்ளது. ஆனால் 50 முதல் 59 வயதுடையவர்களுக்கு இது கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது (8.2%). மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான இந்த முரண்பாடுகளை மதிப்பிடுவதற்கு, ஆராய்ச்சியாளர்கள் சீனாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 3,665 நோயாளிகளை ஆய்வு செய்தனர்.

கடுமையான அறிகுறிகளுடன் கூடிய, பெரும்பாலான மக்கள் குணமடைகிறார்கள் என்பதை அந்த பகுப்பாய்வு காட்டுகிறது. ஆனால் இதில், வயது முக்கியமான காரணியாக உள்ளது. “நிறைய ஊடக கவனத்தை ஈர்க்கும் வெளிப்புற நோயாளிகள் இருக்கலாம். ஆனால், எங்கள் பகுப்பாய்வு 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, 50 வயதிற்குட்பட்டவர்களை விட அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த வயதில் இதற்கும் மேலும் கூட அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் அபாயகரமான நிலையில் இருக்கலாம்” என, இலண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர் அஸ்ரா கானி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நிபுணர்களின் கண்ணோட்டம்

70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான இறப்பு விகிதங்கள் குறித்து, பர்மிங்காமின் தொற்று நோய்கள் பிரிவில் அலபாமா பல்கலைக்கழகத்தின் இயக்குனர் ஜீன் மர்ராஸோ கூறுகிறார். அவர் பகுப்பாய்வில் ஈடுபடவில்லை என்றாலும், அதை மதிப்பாய்வு செய்தவர். “இளையவர்கள் குணமடைவதில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினாலும், அவர்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான விகிதங்கள் குறிப்பிடத்தக்கவை” என்று அவர் கூறுகிறார். “அவர்கள் வெளியேற்றப்பட்டு மீட்கப்பட்டாலும், அவை சுகாதாரப் பாதுகாப்பு முறைமையின் அழுத்தத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களித்தன”, என்று அவர் கூறுகிறார். மேலும், “கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளுக்கு யதார்த்தமான திட்டமிடலை வழங்க இவ்வகையான மதிப்பீடுகள் தேவை” என மார்ராஸோ கூறுகிறார்.

ஆனால் அந்த மதிப்பீடுகள் மற்ற பகுதிகளுக்கு உண்மையாக இருக்காது. தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் தணிப்பு பற்றிய கொள்கைகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக புதிய கொரோனா வைரஸிலிருந்து இறப்பு விகிதங்கள் நாட்டிற்கு நாடு மாறுபடலாம் என்று கோரல் கேபிள்ஸ், மியாமி பல்கலைக்கழகத்தின் கணித பேராசிரியரான பிஹெச்.டி ஷிகுய் ருவான் கூறுகிறார். பகுப்பாய்வுக்கு அவர் ஒரு கருத்தை எழுதி இருந்தார். ஆனால் அதில் ஈடுபடவில்லை. “இறப்பு அல்லது உயிர்வாழும் விகிதங்கள் உண்மையில் அந்த  நாடு எவ்வளவு சிறப்பாக முன்னேற்பாடுகளை செய்துள்ளது என்பதையும், மற்றும் அதன் பொது சுகாதார அமைப்புகள் ஆகியவற்றைப் பொறுத்தது” என்று அவர் கூறுகிறார். சீன அதன் ஆரம்ப கட்டத்திலேயே தனது குடிமக்களை, நாட்டை முடக்கியதற்கு ஆதரவு தெரிவித்தார்.

மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், சீனா அவர்களின் 40,000 சுகாதாரப் பணியாளர்களை பிரச்சினையுள்ள மாகாணத்திற்கு அனுப்பியது. அது வியத்தகு முறையில் உதவியது. “மேலும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், பருவகால காய்ச்சல் உண்டாக்கிய உயிர்பலியை விட மிக அதிகம். குறிப்பாக, 20-29 வயதுடையவர்களுக்கு, COVID-19 இன் மரணம் பருவகால காய்ச்சலை விட 3 மடங்கு அதிகம்” என்று அவர் கூறுகிறார்.

இறப்பு, மீட்பு நேரம், சுகாதார கவலைகள் பற்றிய கூடுதல் தரவு

இந்த ஆய்வுகளின்படி, ஒரு நபர் அறிகுறிகளை வெளிப்படுத்தி, இறப்பதற்கு 18 நாட்கள் வரை ஆகியுள்ளது. இதைக் கணக்கிட, சீனாவின் ஹூபே மாகாணத்தில் 24 இறப்புகளை மதிப்பீடு செய்தனர். மேலும், சராசரி மீட்பு நேரத்தை மதிப்பிடுவதற்கு, ஆராய்ச்சியாளர்கள் 2,010 சர்வதேசஅளவிலான நோயாளிகளின் தரவை ஆய்வு செய்தனர். இதில் 169 குணமடைந்தவர்களும் அடக்கம். இதிலிருந்து, சிகிச்சை மற்றும் மருத்துவமனை வெளியேற்றத்திற்கான சராசரியாக 22 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய், புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் போன்ற அடிப்படை நிலைமைகள் – COVID-19 இலிருந்து கடுமையான நோய் மற்றும் இறப்பு அபாயத்தை அதிகரிப்பதாக முந்தைய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த நிலைமைகளின் விளைவு மேலும் அளவிட, தனிப்பட்ட அளவிலான தரவைக் கொண்டிருக்கவில்லை. எனவே கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.

எது எப்படியாயினும், சிறியவர்களோ, பெரியவர்களோ, கொரோனா அறிகுறி வெளிப்பட்டிருந்தால், தவறாமல் பொது மருத்துவ உதவியை நாட வேண்டும். தற்போது நம்மை காத்துக் கொள்ள இதுவே சிறந்த வழியாகும்.

English: Kathleen Doheny

தமிழில்: லயா