சென்னை:
கொரோனா தொற்றுக்கு ஆளாகி மரணம் அடைப்வர்களை அடக்கம் செய்ய அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எனது கல்லூரி வளாகத்தில் இடம் ஒதுக்கித் தருகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார்.
விஜயகாந்தின் தாராள மனம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் அவரது அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா நோயால்  பாதிக்கப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பினாலே அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களிடம் பேசவே அஞ்சி நடுங்குகின்றனர். அதுபோல கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதிலும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.
நேற்று பிரபல  நரம்பியல் நிபுணர் கொரோனா தொற்றால் மரணமடைய அவரது உடலை கீழ்ப்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. ஆனால், அங்கு உடலை அடக்கம் செய்ய விடாமல் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாநகர் பகுதியிலும் இந்த எதிர்ப்பு பரவியது. இறந்தவருடன் வந்தவர்கள் தாக்கப்பட்டதுடன் அவரது உடல் ஏற்றப்பட்டிருந்த ஆம்புலன்சும் தாக்கப்பட்டது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய தான் இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாமண்டூரில் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள தமது ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்போரின் உடலை அடக்கம் செய்ய இடம் தருவதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மனிதநேய உணர்வுடன் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை பலதரப்பினரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
விஜயகாந்த் ஏற்கனவே, தனது கல்லூரியை கொரோனா வார்டாக தருவதாக அறிவித்துள்ளதுடன், மாவட்ட கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறையினரும், அவரது கல்லூரியை கொரோனா வார்டாக மாற்றுவது குறித்து நேரில் சென்று ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.