பிரிட்டனில் கிடுகிடுவென உயர்ந்த கொரோனா பலி – ஆபத்தில் மருத்துவர்கள்!

லண்டன்: கொரோனா உயிரிழப்புகள் பிரான்ஸ் நாட்டில் 15 ஆயிரத்தை தாண்டியதையடுத்து, பிரிட்டனிலும் பலி எண்ணிகை 15,464 என்பதாக உயர்ந்துள்ளது.

அதேசமயம், அந்நாட்டில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சிக்கலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் அரசு ஏற்கனவே உறுதிமொழி அளித்திருந்தாலும், மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

மருத்துவர்களுக்குத் தேவையான கவுன் மற்றும் கண் பாதுகாப்பு உபகரணங்களுக்குத்தான் அதிகளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு தேவையான 10 கோடி பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அவ‍ை இன்னும் உரியவர்களுக்கு வந்து சேரவில்லை.

மொத்தம் 6000 மருத்துவர்கள் கொரோனா எதிர்ப்புப் போரில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 888 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,464 ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம், புதிதாக 5,525 பேருக்கு கொரோனா உறுதியானதால், அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,14,217 என்பதாக அதிகரித்துள்ளது.