ரோம்

சுற்றுலாவாசிகளின் சொர்கம் என போற்றப்படும் இத்தாலி நாட்டில்   கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

அங்கு நாளுக்கு நாள் பெருகி வரும் உயிர்சேதம் மக்களின் இயல்புவாழ்க்கையை முடக்கி உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே 133 பேர் பலியான சோகம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர இத்தாலிஅரசு நெருக்கடிநிலையை நடைமுறைப் படுத்தியுள்ளது.

கல்வி நிறுவனங்கள், மியூசியம், திரையரங்கம், உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பொதுவிடங்கள் மூடப்பட்டுள்ளன. திருமணம் மற்றும் இறுதியாத்திரை ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.. வாட்டிகன் நகரின் வழிபாட்டுத் தலமான செயின்ட்பீட்டர்ஸ்பர்க் சதுக்கமும் யாருமற்ற நிலையில் காணப்படுகிறது.

வாட்டிகனின் மதகுருவான போப் தனது இருப்பிடத்திலிருந்து, பிற பாதிரிமார்களின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக ஆசி வழங்கி வருகிறார்.

இந்த சூழலில் இத்தாலி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தற்போதைய நிலை போர்காலத்தை நினைவூட்டுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்து வருகின்றனர்…

இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த 82 வயதான இமிதியோ இரண்டாம் உலகப் போரின் போது தனக்கு ஒன்பது வயது எனவும், அப்போதிருந்ததைக் காட்டிலும் தற்போதைய சூழல் மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது…  என்று தெரிவித்து உள்ளார்.

மற்றொரு இளம்பெண் லிடியாகரோலி, தற்போதைய நிலை குறித்து கூறும்போது, தங்கள் நாடே மிகவும் அந்நியமாக உள்ளது எனவும், நாங்கள் தனித்து விடப்பட்டதாக உண்ர்கிறோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இத்தாலி பிரதமர் ஜியுசெப்பி கோன்தெ வட இத்தாலி முதல் நாடு முழுவதும் ’ரெட் சோன்’ (அபாயம்)  பகுதியாகவும், மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவும் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்தார்.

மக்கள் தங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதன் மூலம் இத்தகைய மோசமான சூழலில் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் எனவும் விரைந்து இதற்கென தனி மருத்துவமனைகளை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவசியமான போக்குவரத்து சேவைகளும், சில மருந்துக்கடைகளும் மட்டுமே அங்கு பயன்பாட்டில் உள்ளன.

இத்தாலியின் நடவடிக்கைகளை அடுத்து ஐரோப்பா முழுதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்பெயின், போலந்து உள்ளிட்ட நாடுகள் கால்பந்துப் போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.