அதிகரித்து வரும் கொரோனா மரணம் : அதிர்ச்சி அடையும் தமிழக மக்கள்

சென்னை

நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து வருவதால் தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் சென்னை நகரில் மட்டும் 1407 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38716 ஆகி உள்ளது.   இன்று 1372 பேர் குணம் அடைந்து மொத்தம் 20705 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இன்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 23 உயர்ந்து மொத்த  மரணமடைந்தோர் எண்ணிக்கை 349 ஆகி உள்ளது.   கடந்த 11 நாட்களாகவே கொரோனா மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  ஜூன் மாதம் 1 ஆம்தேதி முதல் இன்று வரை 176 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கிய போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 173 ஆக இருந்தது

தமிழகத்தில் இந்த மாதம் தொடங்கியதில் இருந்தே தினமும் மரணமடைந்தோர் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலேயே இருந்து வருகிறது.   ஒன்றாம் தேதி 11, 2ஆம் தேதி 13, 3ஆம் தேதி 11, 4ஆம் தேதி 12, 5ஆம் தேதி 12, 6 ஆம் தேதி 19, 7ஆம் தேதி 18, 8ஆம் தேதி 17, 9ஆம் தேதி 21 மற்றும் 10 ஆம் தேதி 19 என மரணம் அடைந்தோர் எண்ணிக்கை உள்ளது.  இது மக்களை அச்சுறுத்தி உள்ளது.

 நாட்டிலேயே குறைவான கொரோனா மரணம் தமிழகத்தில் நிகழ்வதாக அண்ணா திமுக அறிவித்து வருகிறது.  எதிர்க்கட்சியான திமுக அரசு தரப்பில் 349 பேர் மரணம் அடைந்துள்ளதாகத் தெரிவிப்பதைத் தவறு எனவும் மேலும் அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் கூறுகின்றது.

மார்ச் மாதம் தமிழகத்தில் 124 கொரோனா நோயாளிகள் மட்டுமே இருந்துள்ளனர். ஆனால் அடுத்த மாதம் வேகமாக அதிகரித்தது.  இதற்குக் காரணம் டில்லியில் நடந்த தப்லிகி ஜமாத் கூட்டம் என அரசு முதலில் அறிவித்தது.   ஆனால் அது பிறகு தனிப்பட்ட இடம் என மாற்றப்பட்டது.  அப்போது பாதிப்பு 17 மடங்காக அதிகரித்து 2199 ஆனது.  ஆனால் அதன் பிறகும் மே,, ஜூன் என அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தேசிய  சராசரியுடன் ஒப்பிடுகையில் பரிசோதனைகள் தமிழகத்தில் அதிகம் நடப்பதாகக் கூறப்படுகிறது.  ஆனால் பொது சுகாதார நிபுணர்கள் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பரிசோதனைகள் இதைப் போல் மூன்று மடங்கு இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.