லண்டன்: பிரிட்டனில், கொரோனா வைரஸ் தொற்றால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 10000 ஐ தாண்டியுள்ளது. இத்தகவல், அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்நாட்டுப் பிரதமரே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போதுதான் வீடு திரும்பியுள்ளார். மேலும், அந்நாட்டுப் பட்டத்து இளவரசர் சார்லஸும்கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.

அந்நாட்டில் இதுவரை 85,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10000 ஐ தாண்டிவிட்டது.

ஏப்ரல் 11ம் தேதியில் மட்டும் பிரிட்டனில் 917 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். வளர்ந்த நாடாக உள்ள பிரிட்டனில் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான கவச உடைகள் இல்லாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்நாட்டு அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகையில், “மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான கவச உடைகளை எங்களால் வழங்க முடியவில்லை. அதற்காக மன்னிப்புக் கோருகிறோம். இதுவரை இல்லாத பெரும் நோய் தொற்றை சந்தித்துள்ளோம். அதனால் சில பிரச்சினைகள் உள்ளன. விரைவில் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான கவச உடைகள் ஏற்பாடு செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.