ஜெனீவா: கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல நாடுகள் களம் இறங்கி உள்ளன.

இந் நிலையில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள்ளாக உலகளவில் 20 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. இது குறித்து அவசர கால திட்ட இயக்குநர் மைக் ரியான் தெரிவித்து உள்ளதாவது:

தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளில் இறங்கி உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் பெரும் சவாலாக உள்ளது. உலகம் முழுவதும் தடுப்பூசி பரவலாக பயன்பாட்டுக்கு வரும் முன்பே, 20 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்.

உலக நாடுகள் இடையே இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இல்லை என்றால் பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவித்தார்.