ரோம்

        மனித வாழ்விற்கு பெரும் சவாலாகத் திகழும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளையும் முடங்கிப் போட்டுள்ள நிலையில் இத்தாலியின் 101 வயது முதியவர் அந்நோயிலிருந்து மீண்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

         இத்தாலியில் 8000 க்கும் மேற்பட்டோரை பலிவாங்கிய கொரோனாவால் உலகளவில் 22000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

       இந்நிலையில் இத்தாலியைச் சேர்ந்த 101 வயது முதியவர் ஒருவர் ரிமினி நகரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ளார். இந்நிகழ்வு உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஊடகங்களால் “மிஸ்டர் பி” என செல்லமாக  அழைக்கப்படும் அந்த முதியவரின் இயற்பெயர் அறியப்படவில்லை. 

    இது குறித்து கருத்து தெரிவித்த துணைமேயர் ‘குளோரியா லிசி’ “இதுவரை சோகமான செய்திகளையே கடந்து வந்த நாம், முதியவர் மறுவாழ்வு பெற்றதை எதிர்கால நம்பிக்கையாக உணர்கிறோம்” என்றார்.   

    இது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக உலக நல்வாழ்வுக் கழகம் அறிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.