காஞ்சிபுரம்

கொரோனா அச்சுறுத்தலால் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.  கை குலுக்குதல், கட்டி அணைத்தல் ஆகியவை கூடாது எனவும் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மக்களை அறிவுறுத்தி உள்ளது.

இதையொட்டி உலக அளவில் அதிகம் பேர் வருகை தரும் மெக்கா, வாடிகன் உள்ளிட்ட  புனிதத் தலங்களுக்கு வருபவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்திய அளவில் அதிக பக்தர்கள் வரும் திருப்பதி கோவில், சீரடி சாய்பாபா கோவில் போன்ற இடங்களுக்குப் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் தமிழகத்தில் ஏராளமான பக்தர்கள் வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் 31 ஆம் தேதி வரை பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இதைப் போல ஸ்ரீரங்கம், பழனி உள்ளிட்ட பல கோவில்களிலும் 31 ஆம் தேதி வரை பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.