கொரோனா….தனிமை கொடுமையை சமாளித்து சாதித்த மருத்துவர்கள்

லகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடைசியாக தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஓமன் நாட்டில் இருந்து காஞ்சிபுரத்துக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக தெரியவந்தது.

சென்னை விமான நிலைய பரிசோதனையில் அவருக்கு அறிகுறி எதுவும் இல்லாததால் அங்கிருந்து சர்வ சாதாரணமாக வெளியே வந்துவிட்டார். அதன் பிறகு அவருக்கு சளி காய்ச்சல் இருமல் அதிகமாகி உள்ளூர் மருத்துவரிடமும் செல்ல, கொரோனா அறிகுறி இருப்பதை உணர்ந்து அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி இருக்கிறார்.

இந்த தகவல் வெளியானதும் தமிழ்நாடே அதிர்ந்து போனது. மற்ற நோயாளிகளுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் முறையில் நிறைய வித்தியாசம் உள்ளது. கொரோனா விஷயத்தில் முதல் கடமை, அவரை மற்ற நோயாளிகளிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் தனிமைப்படுத்துவது தான்.

அப்படி நோயாளியைத் தனிமைப்படுத்தும் போது. தான் உயிர் பிழைக்க முடியுமா முடியாதோ என பயந்து பயந்தே சாகும் மனநிலைக்கு கண்டிப்பாகத் தள்ளப்பட்டு விடுவார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் பார்க்க அனுமதி இல்லாததால் அவர் மனநிலை இன்னும் கடுமையாக பாதிக்கும். மருத்துவர்களுக்கு இந்த மனநிலையை சமாளிப்பது தான் மிகவும் சவாலான விஷயம்..

பாதுகாப்பு உபகரணங்களை பொருத்திக்கொண்டு கவனமாக சிகிச்சை அளிப்பதுடன் இருதரப்புக்கும் ஒரே நேரத்தில் ஏற்படும் உளவியல் ரீதியாக பதட்டத்தையும் மன அழுத்தத்தையும் குறைக்க வேண்டும்..
குறிப்பாக நோயாளி இருக்கும் அறையில் தொலைக்காட்சி பெட்டியை வைக்க மருத்துவ குழு தவிர்த்துள்ளது. காரணம் டிவியில் வரும் செய்திகளைப் பார்த்து நோயாளி மேலும் பீதியாவார் என்கிற முன்னெச்சரிக்கை தான்.
பிறகு தொடர்ந்து நோயாளியின் உடலுறுப்பு செயல்பாடுகளை சீராக கவனித்து வந்ததில் இரண்டு நாட்களில் நல்ல முன்னேற்றம் கிடைத்தது என்கிறார் ஸ்டான்லி மருத்துவமனையின் டீனான டாக்டர் ஆர். ஜெயந்தி.
சர்க்கரை இல்லாத பழச்சாறு மற்றும் காய்கறி சாலட்டுகள் ஆகியவை நோயாளிக்கு கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். தீவிர கண்காணிப்பில் தனிமைப்பட்டுத்தப்பட்டிருந்த இந்த நோயாளியுடன் சீனியர் டாக்டர்கள் கூட வீடியோ சாட்டிங் மூலமாகவே பேணி வந்துள்ளனர்.
மிகவும் மன உளைச்சலுடன் தனிமையில் தவித்த இவரிடம், “கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் டெஸ்ட் ரிசல்ட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை சொன்ன போது இவருக்கு ஏற்பட்ட சந்தோஷத்தையும் அவ்வளவு எளிதில் விவரித்து விட முடியாது” என்கிறார் மருத்துவ சிகிச்சை குழுக்கு தலைமை தாங்கிய மூத்த மருத்துவர் ஒருவர்.
தமிழகத்தில் முதல்முறையாக கொரோனா பாதிக்கப்பட்டதாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, அந்த நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்க சந்தோசமாக தயாராகி வருகிறது சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம்.

கொரோனா பீதியால் உலகமே உறைந்து போயிருக்கும் நிலையில் தமிழக மருத்துவத் துறை வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்கிறது தமிழக சுகாதாரத்துறை..

-லட்சுமி பிரியா