புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 44 வயது ஜோதிமணி என்பவர் மாரடைப்பில் உயிரிழக்கிறார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவருகிறது.

உடனே உறவினர்கள் அவரின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றனர். கடைசியில் சுகாதாரத்துறை ஊழியர்களே சடலத்தை புதைக்கின்றனர். புதைக்குழிக்குள் வீசி விட்டு செல்கின்றனர் என்று சொல்லும் வீடியோவும் உண்டு.

பந்தபாசமே இல்லாமல் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்களே மறுத்தது ஏன்? அவர்களை நோய் தொற்று பீதி அந்த அளவுக்கு ஆட்டிப்படைக்கிறதா?

நோய் தொற்றாளர்களையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் ஏதோ வேற்று கிரகவாசிகளைபோல பொதுவெளியில் சித்தரித்ததில் ஆரம்பித்ததுதானே இதெல்லாம்?

ஒரு பக்கம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டால் காப்பாற்றிக் கொள்ளலாம் என்கிறார்கள். இன்னொரு பக்கம், சுற்றியிருக்கும் அத்தனைபேருக்கும் பீதியை ஏற்றிவிடுகிறார்கள்..

இவ்வளவுக்கு மத்தியில் போன் போட்டால், நாம் நோயுடன்தான் போராடவேண்டும், நோயாளிகளோடு அல்ல என்று ஓயாமல் கூறுகிறது வாய்ஸ் மெசேஜ்..

-ஏழுமலை வெங்கடேசன்