சென்னை: தமிழகத்தில்  தொடக்கப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றால் கடந்த ஐந்தரை மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் கல்வி, தொலைக்காட்சி வாயிலாக மாணாக்கர்களுக்கு கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், வரும் 21ந்தேதி முதல் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணாக்கர்கள் பள்ளி வரலாம், என்றும், சமூக இடைவெளியுடன் அவர்களுக்கு கல்வி கற்பிக்கலாம் என்றும் மத்தியஅரசும் அறிவித்து, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில்,  மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை அக்டோபர் மாதம் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பள்ளிகள் திறந்தால், குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும, பள்ளிக்கல்வி நிபுணர் குழு வழங்கிய பரிந்துரையின்படி மழலையர், தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது. தொற்று தீவிரம் தணிந்தபிறகே குழந்தைகள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

மத்தியஅரசு தன்னார்வ அடிப்படையில்தான் 9 முதல் 12-ம் வகுப்பு வரையான பள்ளிகளை திறக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி  பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் முதல் சுழற்சி முறையில் வகுப்புகளைத் தொடங்க திட்டமிட்டு வருவதாகவும், இதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.