அகமதாபாத்:

குஜராத் மாநில முதல்வர் விஜய்ரூபானியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், முதல்வர் 7 நாள் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை கடந்த வாரம், மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கேடவாலா என்பவர் சந்தித்து பேசினார். குஜராத்தின் காந்தி நகரில் உள்ள முதல்வரின் அலுவலக இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இம்ரானை தவிர்த்து வேறு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் உடனிருந்துள்ளனர்.

தற்போது எம்எல்ஏ இம்ரான் கேடவாலாவுக்கு கொரோனா தொற்று தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவரை  சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள முதல்வர் விஜய் ரூபானி,  தன்னை தானே 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்து உள்ளார். முதல்வருக்கு மருத்துவர்கள் சோதனை செய்துள்ளனர். இதுவரை அவருக்கு கொரோனா தொற்று குறித்த எந்தவித அறிகுறியும் தெரியவில்லை என்றாலும், அடுத்து  நடைபெற திட்டமிட்டிருந்த அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்துள்ள ரூபானி, வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸ் மூலம் அலுவலக பணிகளை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.