சென்னை

இந்தியாவில் 50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரசின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் யாருக்கும் அந்நோயின்  பாதிப்பு இல்லையென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஓமன் நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்நோயின் தாக்கம் இருக்கக் கூடும் எனக் கருதி ராஜிவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சோதனைகளின் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

உலகளவில் 102 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிவருகிறது. இதன் காரணமாக 16 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நோய் சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பிற நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் உலக சுகாதாரக் கழகம் இந்நோயின் பாதிப்பு குறித்து  அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசால் உலகளவில் 1,13,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்ட 4,125 பேரும் அடங்குவர். இதுவரை 4012 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளில் மட்டும் 203 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். இந்நோய் புருனே, ஜெருசலேம், மங்கோலியா, சைப்ரஸ், பனாமா ஆகிய நாடுகளுக்கு புதிதாக பரவியுள்ளது.

இந்தியாவில் மக்கள் கூடுமிடங்களில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனா, இத்தாலி, ஈரான், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

நாட்டின் தலைநகரான டில்லியிலும், அண்டை மாநிலமான கேரளத்திலும் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் அந்நோயின் தாக்குதல் ஒருவருக்கும் இல்லை என அமைச்சர் உறுதி செய்துள்ள தகவல் தமிழக மக்களிடையே பெரும் நிம்மதியையும், மகிழ்சியையும் தந்துள்ளது.