கொரோனா நிதி விவரத்தை 8 வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு வசூல் செய்யப்பட்டு உள்ளது என்பதை  தெரியப்படுத்துவ தில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கொரோனா நிதி விவரத்தை 8 வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு பணி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காக்க அதிக அளவு நிதி தேவைப்பட்டதால், தமிழகஅரசு பொதுமக்களிடம் நிதி வசூலித்தது. அதையடுத்து, தொழிலதிபர்கள் உள்பட சாமானிய மக்கள் வரை அனைவரும் அவர்களால் இயன்ற அளவு நிதி வழங்கினர்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு ஒன்றை தொடர்ந்தார். மனுவில், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு, கொரோனா தடுப்பிற்கு நன்கொடை யாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்ற விவரம் அரசின் இணையத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, மற்ற மாநில  அரசு இணையதளங்களில் கொரோனாவிற் காக பெறப்பட்ட தொகை குறித்த தகவல்கள் இருக்கின்றது.ஆனால் தமிழக இணைய தளத்தில் எந்த தகவலும் இல்லை மனுதாரர் தெரியப்படுத்தினார்.

இதையடுத்து, . கொரோனா நிதி தொடர்பான தகவல்களை இணையத்தில் வெளியிட அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என்று கேள்வி எழுப்பி ,அரசு உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு பெறப்பட்டது? 8 வாரங்களில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது.