சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா

--

சென்னை:

சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்று பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ளது.

இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக தமிழகத்தில் நேற்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 771 ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தி 829 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உள்ளது. மேலும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 516 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.சென்னையில் மேலும் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் முதலமைச்சர் வீட்டில் வேலை பார்த்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் சென்றிருந்த நிலையில் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

காவல் துறையினறுக்கும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. சமீபத்தில் சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே நேற்று ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருந்த நிலையில் 13 பேருக்கு இதுவரை டிஜிபி அலுவலக காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்களுக்கும் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனாவுக்கு எதிரான முன்கள வீரர்களாக பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் கொரோனா பாதிப்பு அச்சத்தை அதிகரித்துள்ளது.