சிங்கப்பூரின் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் கொரோனா வைரஸ்!

சிங்கப்பூர்: கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தாக்கத்தால், 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியை சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில், கொரோனாவால் இதுவரை 32 ஆயிரத்து 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் பலியாகியுள்ளனர். அங்கு ஏப்ரல் 7ம் தேதி அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், படிப்படியாக கடுமையாக்கப் பட்டன.

சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது; கொரோனா தாக்கத்தால் நடப்பாண்டின் சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி 4 முதல் 7% வரை பின்னடைவைக் காணும் என்று மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதுவே, முந்தைய மதிப்பீட்டில் 1 முதல் 4% நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தவகையில், 20 ஆண்டுகளுக்குப் பின், சிங்கப்பூர் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒரே இடத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள், அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கட்டுமானம், கப்பல் மற்றும் பொறியியல் துறைகளில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது, நாட்டின் உற்பத்தியை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் 2 முதல் சிங்கப்பூரில் படிப்படியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவுசெய்யப்பட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.