உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழக அரசு கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படும் தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்கள் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிடும்படி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:

“உரிமைக்காக திரண்டு நிற்கும் என் குடும்பத்தாருக்கு…

இந்திய தேசத்தின் விடுதலைக்காகப் போராடி ஒரு நாள் தேசம் இரண்டுபடும்போது இதுதான் என் தேசம், இங்குதான் என் வாழ்க்கை என்று தங்கிவிட்ட பெருமக்களின் மனதில் அச்சத்தையும், அவர்கள் இருப்புக்கு ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடிய முறையற்ற குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை (CAA) மத்தியில் ஆளும் அரசு கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி கொண்டு வந்தது.

மக்களின் கருத்துக்கும், அவர்களின் விருப்பத்திற்கும் செவி சாய்க்கும் வழக்கம் இந்த அரசுக்கு எப்போதும் இருந்ததில்லை என்பதால், நான் நீதிமன்றத்தில்தான் இதற்கு தீர்வு பெற முடியும் என்ற நம்பிக்கையில் எனது மக்கள் நீதி மய்யக் கட்சியின் பொதுச் செயலாளர் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன்.

அதேநேரம் அச்சத்திலும், குழப்பத்திலும் இருக்கும் மக்கள் களம் இறங்கி போராடுவதற்கு என் ஆதரவையும், என்னை வந்து சந்தித்த இஸ்லாமியப் பெருமக்களிடம் நியாயமான உங்கள் போராட்டத்தை நிறுத்தி விடாதீர்கள். வன்முறையற்ற போராட்டமாக அது தொடர வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.

ஆனால், கடந்த 8 வாரங்களாக பல்வேறு நாடுகள் கரோனா வைரஸ் தாக்குதலில் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் நமது தேசத்தில் இப்போதுதான் பரவ ஆரம்பித்திருக்கிறது. பாதிப்படைந்த எல்லா நாடுகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4-வது மற்றும் 5-வது வாரத்தில் பன்மடங்காக அதிகரித்துள்ளது. மக்கள் திரளும் அனைத்து வாய்ப்புகளையும் தவிர்ப்பதுதான் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

நீங்கள் எனது குடும்பம். உரிமைக்கான இந்தப் போராட்டம் எந்தளவுக்கு முக்கியமானதோ அதை விட உங்கள் அனைவரின் பாதுகாப்பும், நலனும் எனக்கு மிகவும் முக்கியம். உடல் நலமுடன் நீங்கள் இருந்தால்தான் உரிமைக்கான உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்.

எனவே இப்போது உங்கள் நலனில் அக்கறை செலுத்தி இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மையும், நம்முடன் இருப்பவர்களையும் காப்பாற்றிக் கொள்வோம். மீண்டும் நிலைமை சீரானதும் நம் எதிர்ப்பை முன்னை விட தீவிரமாக காட்டுவோம். உங்களுடன் அப்போதும் நான் இருப்பேன்”.